"கூலாக விளையாடுவதில் அவர் தோனிக்கு நிகரானவர்".. டு பிளஸ்சி புகழ்ந்த RCB வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் சீசன் 2022 ல் நேற்றைய KKR அணிக்கெதிரான போட்டியின் மூலம் வெற்றிக்கணக்கை தொடங்கியுள்ளது RCB
புது உத்வேகத்தோடு RCB….
2014 ஆம் ஆண்டு ராயல் சேலஞர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பைப் பெற்ற கோலி 7 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியை விராட் கோலி வழிநடத்தினார். ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்திய அணிகளில் ஒன்றாக RCB இருந்த போதிலும் இதுவரை கோப்பையை வெல்ல முடியவில்லை. இதனால் கடந்த ஆண்டு ஆர் சி பி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். ஆனால் கடைசி வரை ஆர் சி பி அணிக்காகதான் விளையாடுவேன் என அறிவித்திருந்தார். இதையடுத்து இந்த ஆண்டு அந்த அணிக்குக் கேப்டனாக CSK அணியின் தொடக்க ஆட்டக்காரராக கலக்கி வந்த டு பிளஸ்சி ஏலத்தில் எடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார்.
தோல்வியுடன் தொடங்கிய RCB
இதையடுத்து சில புதிய வீரர்களுடன் களமிறங்கிய RCB அணி பஞ்சாப் அணிக்கெதிரான முதல் போட்டியில் பேட்டிங்கில் கலக்கி 205 ரன்கள் சேர்த்த போதும், மோசமான பவுலிங்கால் அந்த போட்டியில் தோல்வி அடைந்தது. ஆனால் அந்த போட்டியில் கோலி, டு பிளஸ்சி, தினேஷ் கார்த்திக் ஆகியோர் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சியாக அமைந்தது. இதையடுத்து நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் RCB வெற்றி பெற்று தங்கள் வெற்றிக்கணக்கை தொடங்கியுள்ளது.
கலக்கிய பவுலர்கள்…
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த KKR அணியின் பேட்ஸ்மேன்களை ஆரம்பம் முதலே கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் RCB பவுலர்கள். விக்கெட்கள் தொடர்ந்து விழுந்து கொண்டே இருந்ததால் KKR பேட்ஸ்மேன்களால் ரன்ரேட்டை உயர்த்த முடியவில்லை. RCB அணியின் வனிந்து ஹசரங்கா 4 விக்கெட்களை, ஆகாஷ் தீப் 3 விக்கெட்களையும் எடுத்துக் கலக்கினர். ஹர்ஷல் படேல் இந்த போட்டியில் இரண்டு மெய்டன் விக்கெட்களை வீசினார். இதனால் KKR அணி 128 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
RCB சரிவும் எழுச்சியும்…
இதையடுத்து எளிய இலக்கோடு களமிறங்கிய RCB அணியின் முதல் மூன்று வீரர்களான அனுஜ் ராவத், டு பிளஸ்சி மற்றும் கோலி ஆகிய மூவரும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்ததால் அணி தடுமாற தொடங்கியது. அடுத்து வந்த நடுவரிசை வீரர்கள் நிதானம் காட்ட, ஸ்கோர் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்தது. ஆனாலும் சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது பதற்றமான நிலையே தொடர்ந்தது. இந்நிலையில் கடைசி போட்டியில் RCB அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் கலக்கியதை போல இந்த போட்டியிலும் 7 பந்துகளில் 14 ரன்களை சேர்த்து அணியை வெற்றி பெறவைத்தார். RCB 19.2 ஓவர்களில் வெற்றி இலக்கான 132 ரன்களை சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தினேஷ் கார்த்திக்கை புகழ்ந்த கேப்டன்…
போட்டிக்குப் பின்னர் பேசிய RCB கேப்டன் டு பிளஸ்சி ‘குறைந்த ஸ்கோர் மேட்ச்கள் மிகவும் முக்கியமானவை. முந்தைய போட்டியில் 200 ரன்கள். தற்போது 130 ரன்கள் இலக்கு. அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுபோன்ற நெருக்கமான ஸ்கோர் போட்டிகளில் கூலாக விளையாடுவதில் தினேஷ் கார்த்திக் தோனிக்கு நிகரானவர். எங்கள் அணியில் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள்.’ எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்