அஸ்வின் பேச்சால் ரவிசாஸ்திரி கொதிப்பு..."பூசி மெழுகி பேசுற ஆள் நான் இல்லை"..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற் பந்து வீச்சாளராக திகழ்பவர் ரவிச்சந்திரன் அஸ்வின். டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இனி அவர் விளையாடுவார் என்று பலர் பேசி வந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில்ல இந்திய அணியில் இடம் பெற்று அசத்தினார். தொடர்ந்து, அடுத்ததாக நடக்கவுள்ள தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அவர் பங்கெடுப்பார் என்று சொல்லப்படுகிறது.
என்ன தான் தனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளிலும் அஸ்வின் திறமையை வெளிப்படுத்தி இருந்தாலும், திடீர் திடீரென்று அதிர்ச்சியளிக்கும் விதத்தில் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்படுவார். குறிப்பாக ரவி சாஸ்திரி இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த போது தான் இப்படியான சம்பவங்கள் அதிகம் நடந்தன.
இது பற்றி சில நாட்களுக்கு முன்னர் மனம் திறந்து பேசிய அஸ்வின், ‘ஒருமுறை ரவி சாஸ்திரி, வெளிநாடுகளில் இந்திய அணி சுற்றுப் பயணம் செய்யும் போது, அணியில் மிகச் சிறந்த சுழற் பந்து வீச்சாளராக திகழ்பவர் குல்தீப் யாதவ் தான் என்றார். அந்தக் கருத்து என்னை சுக்குநூறாக்கியது’ என்று வருத்தப்பட்டார்.
இதற்கு தற்போது ரவி சாஸ்தியிடமிருந்து பதில் கருத்து வந்துள்ளது. அவர், "அணியில் இருந்த அனைவரிடமும் பூசி மெழுகி பேசுவது என் வேலை கிடையாது. எது உண்மையோ அதை எந்த வித முன் முடிவுகளும் இல்லாமல் சொல்ல வேண்டியது தான் என் கடமை.
அதே நேரத்தில் ஒரு கிரிக்கெட் வீரர் பற்றி நான் அப்படி கருத்து கூறியது அஸ்வினைக் காயப்படுத்தியது என்றால் அதுவும் நல்லதுக்கே. அதன் மூலம் அவர் தன் விளையாட்டை மேலும் மேம்படுத்தி சிறந்த வீரராக வர முடிந்தது என நம்புகிறேன். அஸ்வின், தன் மனதில் பட்டதை வெளிப்படையாக சொன்னதும் நான் குல்தீப்-க்கு ஆதரவாக பேசியதும் தவறில்லை என்று தான் நினைக்கிறேன்.
நான் எப்படிப்பட்ட பயிற்சியாளர் என்றால்… நான் சொல்லிய கருத்து ஒரு வீரரை காயப்படுத்தியது என்று வைத்துக் கொள்வோம். அவர் தன் மனதில் நான் தவறான கருத்தைச் சொல்லிவிட்டேன் என்று செயல் மூலம் நிரூபிக்க முனைப்பு காட்ட வேண்டும். 2019-ம் ஆண்டு அந்தக் கருத்தை நான் சொன்னேன். அப்போது அஸ்வின் ஆஸ்திரேலியாவில் பந்து வீசியதற்கும், 2021-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பந்து வீசியதற்கும் உள்ள வேறுபாட்டை நீங்களே பார்க்கலாம். நான் அவருக்குள் ஒரு நெருப்பை எரியவிட்டதை பெருமையாகவே எண்ணுகிறேன்" என்று பேசியுள்ளார்.
மற்ற செய்திகள்