இந்தியர்களை சீண்டிய 'சீனியர்' வீரர்கள்.. ராபின்சனுக்கு பிறகு சிக்கும் பெரிய தலைகள்??.. 'சர்ச்சை'யை கிளப்பிய 'விவகாரம்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இங்கிலாந்து வீரர் ஓல்லி ராபின்சன் (Ollie Robinson), தனது அறிமுக போட்டியிலேயே 7 விக்கெட்டுகளும் எடுத்து, முதல் இன்னிங்ஸில் 42 ரன்கள் எடுத்தும் அசத்தியிருந்தார்.

இந்தியர்களை சீண்டிய 'சீனியர்' வீரர்கள்.. ராபின்சனுக்கு பிறகு சிக்கும் பெரிய தலைகள்??.. 'சர்ச்சை'யை கிளப்பிய 'விவகாரம்'!!

ஆனால், அவர் கிரிக்கெட் உலகில் முத்திரை பதித்த அதே வேளையில், 8 ஆண்டுகளுக்கு முன் இனவெறி மற்றும் பாலியல் தொடர்பாக ராபின்சன் செய்திருந்த ட்வீட்கள், அதிகம் வைரலாகி, சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தனது டீன்ஏஜ் பிராயத்தில் செய்திருந்த ட்வீட்களுக்கு, ராபின்சன் மன்னிப்பும் கேட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, அவர் மீது நடவடிக்கை எடுத்த இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம், ராபின்சனை சஸ்பெண்ட் செய்துள்ளது.

கடந்த சில தினங்களாக, கிரிக்கெட் உலகை ராபின்சனின் சர்ச்சை ட்வீட்கள் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் பற்றிய செய்திகள் தான், அதிகம் ஆக்கிரமித்து வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்களான சிலருக்கும் மிகப்பெரிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி, மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராபின்சனைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணியின் டி 20 மற்றும் ஒரு நாள் போட்டியின் கேப்டன் இயான் மோர்கன் (Eoin Morgan) மற்றும் ஜோஸ் பட்லர் (Jos Buttler) ஆகியோர் தற்போது பழைய ட்வீட் விவகாரத்தில் சிக்கியுள்ளனர். கடந்த 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில், இந்தியர்களின் ஆங்கிலத்தினை கிண்டல் செய்யும் வகையில் சில ட்வீட்களை இருவரும் செய்துள்ளனர்.

இவர்களுடன், நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் பிரெண்டன் மெக்கல்லமும் சேர்ந்து, இந்தியர்களின் ஆங்கிலத்தை நக்கலடித்திருந்தார். இது தொடர்பான ட்வீட்கள் நீக்கப்பட்டிருந்தாலும், இது பற்றிய ஸ்க்ரீன்ஷாட்கள், நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலானது.

ஐபிஎல் போட்டிகள் மூலம் மோர்கன் மற்றும் பட்லர் ஆகியோருக்கு இந்திய அளவில் அதிக ரசிகர்கள் இருந்த நிலையில், அவர்களும் தற்போது இருவருக்கும் அதிக கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ராபின்சனின் விவாகரத்திற்கு பிறகு, அனைத்து வீரர்களின் சமூக வலைத்தள பக்கங்களையும் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் தற்போது ஆராயத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில், இந்தியர்களின் ஆங்கிலத்தை கிண்டல் செய்து ட்வீட் செய்திருந்த மோர்கன் மற்றும் பட்லர் ஆகியோரின் மீதும், தற்போது விசாரணை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவராத நிலையில், அவர்கள் மீது இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது பற்றி, விரைவில் தகவல் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்