‘இங்கிலாந்து ப்ளேயர்ஸ் இப்போ இதுலதான் ரொம்ப பிஸியா இருப்பாங்க’!.. மீம்ஸ் போட்டு கலாய்த்த வாசிம் ஜாபர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசர்ச்சையை ஏற்படுத்தி வரும் இங்கிலாந்து வீரர்களின் பழைய ட்வீட் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.
இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த வாரம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அறிமுக வீரர் ஓலி ராபின்சன், தனது முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த சந்தோஷம் நீடிப்பதற்குள் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, ஓலி ராபின்சன் 8 வருடங்களுக்கு முன்பு செய்திருந்த ட்வீட் திடீரென வைரலானது.
அந்த ட்வீட்டில் இனவெறியை தூண்டும் வகையிலும், பாலியல் ரீதியாக சில வார்த்தைகளையும் அவர் பதிவு செய்திருந்தார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், இதற்காக ஓலி ராபின்சன் மன்னிப்பு கேட்டார். ஆனாலும் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வந்தனர். இதனால் ஓலி ராபின்சனின் பழைய ட்வீட்கள் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தியது.
விசாரணையில் ஓலி ராபின்சன் ட்வீட் செய்தது உறுதியானதை அடுத்து, அவரை அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடைநீக்கம் செய்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிரடியாக உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து பல இங்கிலாந்து வீரர்களின் பழைய ட்வீட்களை ரசிகர்களை ரீ-ட்வீட் செய்து வைரலாக்க ஆரம்பித்தனர்.
அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னணி பந்துவீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன், 11 ஆண்டுகளுக்கு முன்பு பதிவிட்ட ட்வீட் திடீரென பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், சக பந்துவீச்சாளரான ஸ்டுவர் பிராடை லெஸ்பியன் போல இருப்பதாக கூறி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதேபோல் இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் மற்றும் ஜாஸ் பட்லர் ஆகியோர் இந்திய ரசிகர்களின் ஆங்கில அறிவு குறித்து கிண்டல் செய்து பதிவிட்டிருந்த பழைய ட்வீட்களும் தற்போது வைரலாகி கண்டனத்தை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். அதில், ‘முக்கியமான தொடருக்கு நடுவில் இங்கிலாந்து வீரர்கள் தங்களது பழைய ட்வீட்களை டெலிட் செய்வதில் பிஸியாக உள்ளனர்’ என மீம்ஸ் மூலம் வாசிம் ஜாபர் கிண்டல் செய்துள்ளார்.
I knew England would go back to the drawing board, didn't think it'd be this one though😜 #ENGvNZ pic.twitter.com/JZcDRYwylg
— Wasim Jaffer (@WasimJaffer14) June 7, 2021
மற்ற செய்திகள்