‘சிஎஸ்கே ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி’.. ரத்து செய்யப்பட்ட கிரிக்கெட் தொடரால் நடந்த நன்மை..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு இனிப்பான தகவல் வெளியாகியுள்ளது.
14-வது சீசன் ஐபிஎல் (IPL) தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் (CSK), மும்பை இந்தியன்ஸ் அணியும் (MI) மோதின. இதில் மும்பை அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியின் முதல் பாதியில் தடுமாறிய சென்னை அணி, இரண்டாம் பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி 88 ரன்களை எடுத்தார். அதேபோல் பவுலிங்கில் பிராவோ, தீபக் சஹார் சிறப்பாக செயல்பட்டனர்.
கடந்த ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிஎஸ்கே அணி, தற்போது அதிலிருந்து மீண்டு சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறது. இந்த சூழலில் ப்ளே ஆஃப் சுற்றின்போது இங்கிலாந்து வீரர்களான மொயில் அலி, சாம் கர்ரன் ஆகியோர் விளையாட வாய்ப்பில்லை என சொல்லப்பட்டது.
அதற்கு காரணம், வரும் அக்டோபர் மாதம் 17-ம் தேதி முதல் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அதனால் இந்த தொடருக்கு முன்னதாக பாகிஸ்தானுடன் டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணி (PAKvsENG) விளையாட இருந்தது.
ஆனால் தற்போது பாகிஸ்தானில் இங்கிலாந்து வீரர்களுக்கு பாதுகாப்பு பிரச்சனைகள் இருப்பதாக கூறி அந்த கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நியூஸிலாந்து அணியும் இதே காரணத்தை கூறி, போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடர் முழுவதும் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது உறுதியாகியுள்ளது. இது சிஎஸ்கே அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்களிடையே உற்சாகம் ஏற்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்