‘ஒருத்தர் மேல நீங்க கைய வச்சா நாங்க 11 பேரும் வருவோம்’!.. லார்ட்ஸ் மைதானத்தில் ‘தரமான’ சம்பவம் பண்ணிய இந்தியா..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 364 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 129 ரன்களும், ரோஹித் ஷர்மா 83 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளும், ராபின்சன் மற்றும் சாம் கர்ரன் தலா 2 விக்கெட்டுகளும், மொயின் அலி 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 391 ரன்களை குவித்தது. இதில் அதிபட்சமாக அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் 180 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணியைப் பொறுத்தவரை முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டுகளும், முகமது ஷமி 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி, 8 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ரஹானே 61 ரன்கள் எடுத்தார். குறிப்பாக கடைசி கட்டத்தில் ஜோடி சேர்ந்த முகமது ஷமி (56 ரன்கள்), பும்ரா (34 ரன்கள்) கூட்டணி 90 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது.
இதனை அடுத்து 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடியது. ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 120 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இங்கிலாந்து அணி பறிகொடுத்தது. இதனால் 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இதில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிய அவர், ‘இரு பலமான அணிகள் மோதும்போது இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது சாதாரணமானதுதான். இதற்கெல்லாம் காரணம் இரண்டு அணிகளும் வெற்றிப்பெற வேண்டும் என முனைப்பு காட்டியதுதான். எங்களுக்கும் சிறிது வார்த்தை போரில் ஈடுபடுவது பிடிக்கும்.
ஆனால் எங்களில் ஒரு வீரரை மட்டும் குறி வைத்து நீங்கள் தாக்கினாலோ, பேசினாலோ நாங்கள் 11 பேரும் அவருக்கு பக்கபலமாக நின்று பதிலடி கொடுப்போம். நாங்கள் பவுலிங் போடும்போது இந்தச் சம்பவங்களால் மிகவும் உத்வேகத்துடனும், ஆக்ரோஷத்துடனும் இருந்தோம். அதுதான் எங்களுக்கு வெற்றியை தர உதவியது’ என இங்கிலாந்து அணிக்கு கே.எல்.ராகுல் பதிலடி கொடுத்துள்ளார்.
இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அடிக்கடி இந்திய வீரர்களை சீண்டிக் கொண்டே இருந்தார். இதற்கு விராட் கோலி அவ்வப்போது பதிலடி கொடுத்து வந்தார்.
நேற்றைய போட்டியில் பேட்டிங் செய்துகொண்டிருந்த பும்ராவை இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லர் கிண்டல் செய்தார். இதனால் இருவருக்கும் இடையே வார்த்தை போர் ஏற்பட்டது. இதனை அடுத்து இங்கிலாந்து வீரர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பவுண்டரிகளை விளாசி பும்ரா மிரட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்