‘அவர் விளையாடுறத பார்க்க ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு’!.. இளம் ‘தமிழக’ வீரரை ஸ்பெஷலாக புகழ்ந்த தினேஷ் கார்த்திக்.. யாருன்னு தெரியுதா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதமிழக இளம்வீரர்கள் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடுவதைப் பார்த்தால் மகிழ்ச்சியாக உள்ளதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரின் 18-வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை எடுத்தது.
இதில் அதிகபட்சமாக கொல்கத்தா அணியின் இளம்வீரர் ராகுல் திருப்பதி 36 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை கிறிஸ் மோரிஸ் 4 விக்கெட்டுகளும், உனத்கட், சேத்தன் சக்காரியா மற்றும் முஸ்தாபிஃசூர் ரஹ்மான் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 18.5 ஓவர்களில் 134 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக கேப்டன் சஞ்சு சாம்சன் 42 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அசத்தினார்.
இந்த நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக பேசிய கொல்கத்தா அணி வீரர் தினேஷ் கார்த்திக், ஐபிஎல் தொடரில் முதல்முறையாக விளையாடும் தமிழக இளம்வீரர் ஷாருக்கானை (பஞ்சாப் கிங்ஸ்) புகழ்ந்து பேசினார். அதில், ‘ஷாருக்கான் சிறப்பாக விளையாடுவதைப் பார்க்கும்போது ரொம்ப ரொம்ப சந்தோஷமாக உள்ளது. ஐபிஎல் தொடரில் தமிழக வீரர்கள்தான் அதிகமாக விளையாடுகின்றனர் என நினைக்கிறேன்.
மொத்தமாக 13 தமிழக வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர். இன்னும் நிறைய வீரர்கள் ப்ளேயிங் 11-ல் இடம்பிடிப்பதைப் பார்க்க விருப்பமாக உள்ளது’ என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். முன்னதாக தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்களுக்கு தினேஷ் கார்த்திக் ‘அப்பா’ போன்றவர் என தமிழக வீர்ர ஷாருக்கான் புகழ்ந்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக இளம்வீரர்களான நடராஜன் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்), வாசிங்டன் சுந்தர் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு), வருண் சக்கரவர்த்தி (கொல்கத்தா நைட்ரைடர்ஸ்) முருகன் அஸ்வின் மற்றும் ஷாருக்கான் (பஞ்சாப் கிங்ஸ்), சாய் கிஷோர், ஹரி நிஷாந்த், ஜெகதீசன், சித்தார்த் (சென்னை சூப்பர் கிங்ஸ்) ஆகியோர் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்