‘இப்படி முட்டாள்தனமா கேள்வி கேட்கும்போது அமைதியா இருக்கிறதெல்லாம் ரொம்ப கஷ்டம்’!.. தமிழக வீரரின் ‘வேறலெவல்’ ட்வீட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவிராட் கோலியிடம் நிருபர் ஒருவர் கேட்ட சர்ச்சை கேள்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தினேஷ் கார்த்திக் ட்வீட் செய்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மாவும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். இதில் ஆட்டத்தின் முதல் ஓவரில், தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே எல்பிடபுள்யூ ஆகி ரோஹித் ஷர்மா வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து கே.எல்.ராகுல் 3 ரன்னில் வெளியேற, அடுத்ததாக வந்த சூர்யகுமார் யாதவும் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலி (57 ரன்கள்) மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் (39 ரன்கள்) கூட்டணி நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 151 ரன்களை இந்தியா எடுத்தது.
இதனை அடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 17.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் 68 ரன்களும், முகமது ரிஸ்வான் 79 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில், போட்டி முடிந்தபின் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நிருபர் ஒருவர், ‘அடுத்த போட்டியில் நல்ல ஃபார்மில் இருக்கும் இஷான் கிஷனை அணியில் சேர்த்துவிட்டு ரோஹித் ஷர்மாவை அணியில் இருந்து நீக்கலாமே?’ என கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியை கேட்டு அதிர்ச்சியடைந்த விராட் கோலி, ‘இதை நீங்கள் உண்மையாகதான் கேட்கிறீர்களா? சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் ஷர்மா போன்ற வீரரை நீக்க வேண்டும் என்று கூறுகிறீர்களா?’ என சொல்லிவிட்டு சிரித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘ நீங்கள் சர்ச்சையை ஏற்படுத்த விரும்பினால், முன்பே அதை கூறிவிடுங்கள். அப்போதுதான் நானும் அதற்கு ஏற்றார்போல் பதில் சொல்ல முடியும்’ என கிண்டலாக கூறினார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், இதுகுறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், ‘விராட் கோலியின் ரியாக்சன் பிடித்திருக்கிறது’ என பதிவிட்டு இரண்டு சிரிக்கும் ஸ்மைலியை பதிவிட்டுள்ளார்.
Loved Virat's reaction 🤣🤣
But more importantly, so hard to maintain calm when such silly questions are being asked.
After such a pressure-filled match, good on Virat to maintain his composure. 👍 https://t.co/gVKYcLlBhl
— DK (@DineshKarthik) October 25, 2021
மேலும், ‘ஆனால் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இதுபோன்ற முட்டாள்தனமான கேள்வி கேட்கப்படும்போது அமைதியாக இருப்பது மிகவும் கடினம். இப்படி அழுத்தம் நிறைந்த போட்டிக்கு பின் விராட் கோலி நிதானத்தை கடைபிடித்தது மிகவும் நல்லது’ என தினேஷ் கார்த்திக் பதிவிட்டுள்ளார். பொதுவாக இதுபோன்ற சர்ச்சையான கேள்விக்கு கோபத்தை வெளிப்படுத்தும் விராட் கோலி, நேற்று பக்குவமாக பதிலளித்தது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது
மற்ற செய்திகள்