தினேஷ் கார்த்திக்கின் 14 வருட ஆசை நிறைவேறுமா?.. ‘தல’ தோனியின் கையில் இருக்கும் அந்த முடிவு.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட காத்திருக்கும் தினேஷ் கார்த்திக்கின் நீண்ட நாள் ஆசை நிறைவேறுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
தனி ஒருவன் தினேஷ் கார்த்திக்
சென்னையை சேர்ந்த தினேஷ் கார்த்திக், தமிழ்நாட்டு கிரிக்கெட் அணிக்காக விளையாடி இந்திய அணியில் இடம்பெற்றார். சர்வதேச கிரிக்கெட்டில் பல அற்புதமான ஆட்டங்களை ஆடியுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு இலங்கையில் நடந்த நிதாஷ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை எதிர்த்து விளையாடியது. அப்போட்டியில் தோல்வி பெறும் தருவாயில் இருந்த இந்திய அணியை, தனி ஒருவனாக நின்று வெற்றி பெற வைத்தார்.
நீண்ட நாள் ஆசை
இப்படி பல சிறப்புகளை பெற்றுள்ள தினேஷ் கார்த்திக்கிற்கு நீண்ட நாள் ஆசை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவதுதான். ஐபிஎல் தொடரில் இதுவரை பஞ்சாப், மும்பை, டெல்லி, பெங்களூரு, குஜராத் மற்றும் கொல்கத்தா என 6 அணிகளில் விளையாடிவிட்டார். ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த அவர் ஒருமுறை கூட சிஎஸ்கே அணிக்காக விளையாடியதில்லை.
தோனியின் தலைமையில் விளையாட ரெடி
ஒரு முறை வெளிப்படையாகவே சென்னை அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசையை தினேஷ் கார்த்திக் கூறிவிட்டார். அதில், ‘2008-ம் ஆண்டு ஐபிஎல் வீரர்கள் தேர்வின்போது சிஎஸ்கே அணி என்னைக் கண்டிப்பாக தேர்வு செய்வார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தேன். எனக்கிருந்த சந்தேகம் நான் கேப்டனா? இல்லையா? என்பதுதான். ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக தோனியை தேர்வு செய்தார்கள். அது எனது நெஞ்சில் ஈட்டியால் குத்தியது போல இருந்தது. ஆனால் இப்போதும் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியில் விளையாட தயாராக இருக்கிறேன்’ என தினேஷ் கார்த்திக் கூறியிருந்தார்.
புதிய அணிகள்
கடந்த 4 ஆண்டுகளாக கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் சார்பாக தினேஷ் கார்த்திக் விளையாடி வந்தார். தற்போது லக்னோ, அகமதாபாத் என்ற இரண்டு புதிய அணிகள் இணைய உள்ளன. அதனால் அனைத்து அணியில் உள்ள வீரர்களும் கலைக்கப்பட்டு மெகா ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது.
விடுவித்த KKR
முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் ஏற்கனவே விளையாடிய வீரர்கள் 4 பேரை தக்க வைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி வழங்கியது. அதன்படி கொல்கத்தா அணி சுனில் நரேன், ஆண்ட்ரே ரசல், வருண் சக்கரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகிய 4 வீரர்களை தக்க வைத்துள்ளது. இதில் தினேஷ் கார்த்திக் விடுவிக்கப்பட்டுள்ளதால், அவர் ஏலத்தில் கலந்துகொள்ள உள்ளார்.
இளம் வீரர்களுக்கே முக்கியத்துவம்
அதனால் இந்த முறை சிஎஸ்கே அணி தினேஷ் கார்த்திக்கை ஏலத்தில் எடுக்குமா என தமிழக ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, இளம் வீரர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போதே, இனி அடுத்த 10 ஆண்டுகளுக்கு திறம்பட விளையாடும் வகையில் அணியை கட்டமைக்க வேண்டும் என்று கூறினார்.
தோனியின் கையில் முடிவு
அதுபோலவே தனக்கு அதிக விலை கொடுத்து தக்க வைக்க வேண்டாம் என சிஎஸ்கே நிர்வாகத்திடம் தோனி கூறினார். அந்த பணத்தில் இளம் வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம் என அறிவுரை கூறினார். மேலும் ஆல்ரவுண்டர் ஜடேஜாவை முதன்மை வீரராக தக்க வைக்க கூறினார். (ஜடேஜா ரூ.16 கோடி, தோனி ரூ.12 கோடி).
அதனால் 34 வயதாகும் தினேஷ் கார்த்திக்கை தோனி தேர்வு செய்வாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஐபிஎல் ஏலத்துக்காக 2 தினங்களுக்கு முன்பு சென்னை வந்த தோனி, ஏலத்தில் எடுக்க வேண்டிய வீரர்கள் குறித்து சிஎஸ்கே நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதனால் சிஎஸ்கே அணியில் விளையாட வேண்டும் என்ற தினேஷ் கார்த்திக்கின் 14 வருட ஆசை தோனியின் கையிலே உள்ளது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்