‘என்னால அவரோட வாய்ப்பு பறிபோக விரும்பல’!.. சிஎஸ்கே வீரருக்காக தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதமிழ்நாடு அணிக்காக முதல் தர டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருப்பது குறித்து தினேஷ் கார்த்திக் பகிர்ந்துள்ளார்.
இந்திய அணியின் சீனியர் வீரரான தினேஷ் கார்த்திக், இந்திய அணிக்காக 2004-ம் ஆண்டு அறிமுகமாகி தற்போது வரை விளையாடி வருகிறார். இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள், 94 ஒருநாள் மற்றும் 32 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் இளம் வீரர்களின் வருகையால் சமீபகாலமாக இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்காமல் இருந்து வருகிறது. தற்போது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் சார்பாக விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் தமிழ்நாடு அணிக்காக முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருப்பது குறித்து தினேஷ் கார்த்திக் பகிர்ந்துள்ளார். அதில், ‘தமிழக அணிக்காக முதல் தர டெஸ்ட் போட்டிகளில் எனக்கு விளையாட விருப்பம் இல்லை. ஏனென்றால் என்னுடைய இடத்தால் மற்ற இளம் வீரர்கள் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக ஜெகதீசனுக்கு என்னால் வாய்ப்பு பறிபோகும். அப்படியொரு சூழ்நிலை ஏற்பட கூடாது என்பதற்காக முதல் தர கிரிக்கெட்டில் விளையாடாமல் இருக்கிறேன்’ என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
மேலும் இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் விளையாடுவது தான் தற்போதைய நோக்கமாக உள்ளதாகவும், டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட ஆர்வமாக காத்திருப்பதாகவும் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். தற்போது தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு இவர் தலைமையிலான தமிழ்நாடு அணி சையத் முஷ்டாக் அலி கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
இந்த நிலையில் தமிழ்நாடு அணிக்காக முதல் தர டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட மாட்டேன் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளதால், ஜெகதீசனுக்கு வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக ஜெகதீசன் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்