‘எனக்கு நல்லா தெரியும்.. டிராவிட் நிச்சயம் இதை செய்ய மாட்டார்’.. தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ரஹானே மற்றும் புஜாரா இடம்பெறுவது குறித்து தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதனை அடுத்து மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்தை 372 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்தியா கோப்பையை வென்றது.
இந்த நிலையில் வரும் 26-ம் தேதி இந்திய அணி தென் ஆப்பிரிக்காவிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் ரஹானே மற்றும் புஜாரா இடம் பிடிப்பது சந்தேகமாகியுள்ளது.
அதற்குக் காரணம் நடந்து முடிந்த நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருவரும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் புஜாரா முதல் போட்டியின் முதல் இன்னிங்சில் 26 ரன்களும் இரண்டாவது இன்னிங்சில் 22 ரன்களும் எடுத்தார். அதேபோல் ரஹானே முதல் இன்னிங்சில் 35 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 ரன்களும் எடுத்தார். இதனை அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக ரஹானே விளையாடவில்லை. இதனிடையே 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய புஜாரா முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டும், இரண்டாவது இன்னிங்சில் 47 ரன்களும் எடுத்தார்.
அதே வேளையில் இளம் வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர், மயங்க் அகர்வால் உள்ளிட்ட வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதனால் மூத்த வீரர்களான ரஹானே மற்றும் புஜாராவுக்கு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், ‘இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் பற்றி நன்கு அறிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். என்னை பொருத்தவரை ரஹானே மற்றும் புஜாராவுக்கு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட நிச்சயமாக வாய்ப்பு கிடைக்கும். இக்கட்டான பல போட்டிகளில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் அவர்கள் களமிறங்கும் ஆர்டரில் பிரச்சனை இருக்கும் பட்சத்தில், டிராவிட் அதன் மாற்றும் குறித்து யோசிப்பார்’ என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்