'இந்த ஒரு விஷயம் தான் இந்திய அணியின் மோசமான தோல்விக்கே காரணம்...'- தினேஷ் கார்த்திக் பாய்ச்சல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென் ஆப்ரிக்கா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.
குறிப்பாக இரண்டாவது போட்டியில் இந்தியா தோல்வி கண்ட விதம் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இரண்டாவது ஆட்டத்தின் கடைசி இன்னிங்ஸில் தென் ஆப்ரிக்க அணிக்கு, இந்திய அணி 240 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. எப்படியும் இந்தப் போட்டியையும் இந்திய அணி வென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
குறிப்பாக முகமது ஷமி, சிராஜ், பும்ரா, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருப்பதால் தென் ஆப்ரிக்க அணி, இலக்கை அடைவது சிரமம் என்று கருதப்பட்டது. ஆனால், நடந்தது வேறு. இந்திய பவுலர்கள் எவ்வளவோ முயற்சி எடுத்தும் தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்களை அசைத்துப் பார்க்க முடியவில்லை.
மேலும், சிராஜ் காயம் காரணமாக ஆட்டத்தின் பாதியிலேயே வெளியேறினார். இதனால் இந்திய அணிக்கு நெருக்கடி அதிகரித்தது. முடிவில் தென் ஆப்ரிக்க அணி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் அடைந்து டெஸ்ட் தொடரை சமன் செய்தது. இதன் மூலம் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இதுவரை தென் ஆப்ரிக்க மண்ணில் இந்திய அணி, ஒரேயொரு டெஸ்ட் தொடரில் கூட வென்றதில்லை என்பதால் மூன்றாவது ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இரண்டாவது போட்டியின் தோல்வி குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், ‘உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியாக இருக்கிறது இந்தியா. அப்படி இருக்கையில் இந்த தோல்வியானது இந்திய அணியை வெகுவாக பாதித்திருக்கும். குறிப்பாக இந்திய அணி இரண்டாவது டெஸ்ட்டில் அந்த அளவுக்கு பவுலிங்கில் சிறப்பாக செயல்படவில்லை.
இந்தப் போட்டியைப் பொறுத்தவரை இந்திய அணி, இந்த அளவுக்கு பவுலிங்கில் திணறியதற்கு முக்கிய காரணம் சிராஜின் காயம் தான். அவர் போட்டியிலிருந்து விலகியது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இது இந்தியாவுக்குப் பின்னடைவாக அமைந்துவிட்டது. சிராஜ், தென் ஆப்ரிக்க சூழலில் பந்தை நன்றாக ஸ்விங் செய்யக்கூடியவர். அவர் இல்லாததால் தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்களுக்கு அதிக அழுத்ததத்தை இந்திய பந்து வீச்சாளர்களால் கொடுக்க முடியவில்லை. சிராஜ் இருந்திருந்தால் கதை வேறாக இருந்திருக்கும்’ என்று உறுதியாக சொல்கிறார்.
மற்ற செய்திகள்