மாலத்தீவு மதுபாரில் முன்னாள் வீரருடன் சண்டையா..? திடீரென பரபரப்பை கிளப்பிய செய்தி.. சர்ச்சைக்கு வார்னர் கொடுத்த பதில்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமாலத்தீவில் தங்கியிருக்கும் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், மது பாரில் முன்னாள் வீரர் ஒருவருடன் சண்டையிட்டதாக செய்திகள் பரவி வருகின்றன.
நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய கிரிக்கெட் வீரர்களில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து ஐபிஎல் தொடரில் விளையாடிய வெளிநாட்டு வீரர்களை பத்திரமாக அவரவர் நாட்டுக்கு பிசிசிஐ அனுப்பி வைத்தது.
ஆனால் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான விமான சேவை வரும் 15-ம் தேதி வரை தடை செய்யப்பட்டுள்ளதால், ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்தனர். இதனால் ஐபிஎல் தொடரில் கலந்துகொண்ட ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர் என 38 பேரை மாலத்தீவுக்கு பிசிசிஐ அனுப்பி வைத்தது.
இந்த நிலையில் மாலத்தீவில் உள்ள மது பாரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி (SRH) வீரர் டேவிட் வார்னரும் (David Warner), ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், தொலைக்காட்சி வர்ணனையாளருமான மைக்கேல் சிலாட்டரும் (Michael Slater) சண்டையிட்டுக் கொண்டதாக செய்திகள் பரவி வருகின்றன. முதலில் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டு, பின்னர் அது மோதலாக மாறியதாக சொல்லப்படுகிறது.
ஆனால் இது முற்றிலும் வதந்தி என்று மைக்கேல் சிலாட்டர் மறுத்துள்ளார். இதுதொடர்பாக foxsports.com.au. சேனலில் பேசிய சிலாட்டர், ‘நானும் டேவிட் வார்னரும் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் சண்டை வருவதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பே இல்லை. இதுமாதிரியான தகவல் எங்கிருந்துதான் வருகிறது என்று தெரியவில்லை’ என கூறியுள்ளார்.
அதேபோல் இதுகுறித்து தெரிவித்த வார்னர், ‘இந்த மாதிரியான தகவல் எல்லாம் எங்கிருந்து வருகிறது என்றே தெரியவில்லை. உறுதியான ஆதாரம் இல்லாமல் எதையும் எழுதாதீர்கள்’ என அவர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் இருந்தார். ஆனால் இந்த தொடரில் அந்த அணி தொடர் தோல்வியை சந்தித்தை அடுத்து, அவருக்கு பதிலாக நியூஸிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்