'சேலத்தில்' விரைவில் 'ஐ.பி.எல்' போட்டி... தல 'தோனி' விளையாடுகிறார்...! "கேக்கவே நல்லாருக்குல்ல..."
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசேலம் அருகே சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் இன்று திறக்கப்பட்ட நிலையில், ஐபிஎல் போட்டிகள் அங்கு நடைபெறும் என்று பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் கூறியுள்ளார்.
சேலத்தில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்ட கிரிக்கெட் மைதானத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத், பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய சீனிவாசன், சேலத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும் என்றும், தோனி விளையாடுவார் என்றும் குறிப்பிட்டார்.
சேலம் வாழப்பாடியை அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டியில், சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தூரத்தில், இயற்கை எழில் கொஞ்சும் மலையடிவார சூழலில் இந்த கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ளது. 16 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கிரிக்கெட் மைதானம் இரண்டு ஆண்டுகள் அயராத உழைப்பில் உருவாகியுள்ளது. மைதானத்தை சுற்றிலும் விரைவில் பார்வையாளர்கள் கேலரி அமைக்கப்பட உள்ளதாகவும், அனைத்து நவீன வசதிகளையும் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் சேலம் கிரிக்கெட் ஃபவுண்டேஷன் அமைப்பின் தலைவர் ராமசாமி தெரிவித்தார்.
முன்னதாக, 14 வயதுக்கு உட்பட்ட மாநில அணிக்கு வீரர்களை தேர்வு செய்வதற்கான பயிற்சி போட்டி இங்கு நடத்தப்பட்டுள்ளது. விரைவில் இங்கு டிஎன்பிஎல், ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நடைபெற உள்ளன.