கோலியை அவுட்டாக்க ‘தோனி’ போட்ட மாஸ்டர் ப்ளான்.. ‘மேட்ச்சோட திருப்புமுனையே இதுதான்’.. வெளியான சீக்ரெட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் (IPL) லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட் கோலியும், தேவ்தத் படிக்கலும் களமிறங்கினர். இந்த ஜோடி ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. அதனால் பவர்ப்ளே ஓவர் முடிவில் 50 ரன்களை பெங்களூரு அணி தாண்டியது. இதனால் இந்த கூட்டணியை பிரிக்க சிஎஸ்கே கேப்டன் தோனி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
ஆனால் சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஷர்துல் தாகூர் மற்றும் தீபக் சஹாரின் ஓவரில் சிக்சர், பவுண்டரிகள் பறந்தன. இதனால் அந்த கூட்டணி 100 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தது. இந்த சூழலில் டெத் ஓவர்களை வீசும் பிராவோவை முன்பே பந்துவீச தோனி அழைத்தார். அதன்பலனாக பிராவோவின் ஓவரில் விராட் கோலியும், தேவ்தத் படிக்கலும் தடுமாற ஆரம்பித்தனர். அப்போது ஜடேஜாவும் கை கொடுக்கவே, பெங்களூரு அணியால் ரன்களை குவிக்க முடியவில்லை.
இந்த சமயத்தில் பிராவோ வீசிய 14-வது ஓவரில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து விராட் கோலி (53 ரன்கள்) அவுட்டானார். இதுதான் ஆட்டத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து களமிறங்கிய ஏபி டிவில்லியர்ஸ், தேவ்தத் படிக்கலுடன் ஜோடி சேர்ந்தார். அப்போது சர்துல் தாகூரை பந்துவீச தோனி அழைத்தார். அவர் வீசிய 17-வது ஓவரில் ஏபி டிவில்லியர்ஸும் (12 ரன்கள்), தேவ்தத் படிக்கலும் (70 ரன்கள்) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனை அடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல், சிக்சர் விளாசி அச்சுறுத்தினார். அப்போது பிராவோ வீசிய 20-வது ஓவரில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவரும் ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களை பெங்களூரு அணி எடுத்தது.
இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 18.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 38 ரன்களும், அம்பட்டி ராயுடு 32 ரன்களும், டு பிளசிஸ் 31 ரன்களும் எடுத்தனர். மேலும் பிராவோவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே அணி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.
மற்ற செய்திகள்