‘எல்லாரும் அப்படி சொன்னப்போ ரொம்ப வேதனையா இருந்துச்சு’!.. தோனியுடனான நட்பு குறித்து சுயசரிதையில் ‘சின்ன தல’ உருக்கம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியில் நீண்ட காலம் விளையாடியதற்கு தோனியுடனான நட்பு மட்டுமே காரணம் இல்லை என சுரேஷ் ரெய்னா தெரித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடி தந்துள்ளார். சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இந்திய அணியில் நீண்ட காலம் சுரேஷ் ரெய்னா விளையாடி வந்தார். ஆனாலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடனான நட்பு காரணமாகவே, அவர் நீண்ட காலம் இந்திய அணியில் இருந்ததாக பலரும் விமர்சனம் செய்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ‘Believe’ என்ற தனது சுயசரிதை புத்தகத்தில் சுரேஷ் ரெய்னா எழுதியுள்ளார். அதில், ‘இந்திய அணியில் எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்ததற்கு, தோனியுடனான நட்புதான் காரணம் என்று இந்திய மக்கள் விமர்சனம் செய்தனர். அப்போது அது எனக்கு மிகவும் மன வேதனையாக இருந்தது. தோனியின் நம்பிக்கையையும், மரியாதையையும் பெற நான் எப்படி கடினமாக உழைத்தேனோ, அதேபோலத்தான் இந்திய அணியில் தொடர்ந்து இடம்பெறவும் நான் கடினாமாக பாடுபட்டேன்.
நான் சிறப்பாக விளையாடியதால்தான் எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அதேபோல் என்னிடம் இருக்கும் திறமையை எப்படி வெளிக்கொண்டு வருவது என்பது தோனிக்கு நன்றாகவே தெரியும். நானும் அவரை முழுமையாக நம்புகிறேன்’ என சுரேஷ் ரெய்னா குறிப்பிட்டுள்ளார்.
தோனியும், சுரேஷ் ரெய்னாவும் நீண்ட காலமாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். குறிப்பாக, கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் ரெய்னாவும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அந்த அளவுக்கு இருவரும் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியில் ஒன்றாக விளையாடியதுபோல், தற்போது ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக இருவரும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்