சிஎஸ்கே ரசிகர்களுக்கே இது செம ‘ஷாக்’ தான்.. ஷர்துல் தாகூர் 4-வது ஆர்டர்ல பேட்டிங் செய்ய காரணம் என்ன..? சீக்ரெட்டை சொன்ன ‘தல’ தோனி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஷர்துல் தாகூரை 4-வது வீரராக களமிறக்கியதற்கான காரணத்தை கேப்டன் தோனி விளக்கியுள்ளார்.
துபாய் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் (IPL) தொடரின் முதல் ப்ளே ஆஃப் (PlayOffs) சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ப்ரித்வி ஷா 60 ரன்களும், கேப்டன் ரிஷப் பந்த் 51 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், சென்னை அணி பேட்டிங் செய்தது. இதில் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே டு பிளசிஸ் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ராபின் உத்தப்பா கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இதில் 63 ரன்கள் (7 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்திருந்தபோது டாம் கர்ரன் வீசிய 14-வது ஓவரில் ராபின் உத்தப்பா அவுட்டானார். இதனை அடுத்து 4-வது வீரராக மொயின் அலி அல்லது அம்பட்டி ராயுடு களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் (Shardul Thakur) களமிறங்கினார். ஆனால் அவர் எதிர்கொண்ட முதல் பந்தே பவுண்டரிக்கு விளாச முயன்று ஸ்ரேயாஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து வந்த அம்பட்டி ராயுடுவும் ரன் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.
இதனால் கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சிஎஸ்கே அணி இருந்தது. அப்போது டாம் கர்ரன் வீசிய கடைசி ஓவரில் தோனி ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசினார். இதனால் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. இதனமூலம் இறுதிப்போட்டிக்கு சிஎஸ்கே அணி முன்னேறியுள்ளது.
இந்த நிலையில் போட்டி முடிந்த பின் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி (Dhoni), 4-வது வீரராக ஷர்துல் தாகூர் களமிறக்கப்பட்டதற்கான காரணத்தை கூறியுள்ளார். அதில், ‘ஜடேஜாவை தவிர மற்ற வீரர்கள் யாரையும் முன்கூட்டியே களமிறக்கி முயன்று பார்க்கவில்லை. எங்கள் அணியில் 9-வது வீரர் வரை பேட்டிங் செய்வார்கள். தீபக் சஹார் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகிய இருவரும் கூட பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை கொடுப்பார்கள்.
உத்தப்பா அவுட்டானதும் வேறொரு பேட்ஸ்மேன் களமிறங்கினால், முதல் பந்திலேயே பவுண்டரி அடிக்கலாமா வேண்டாமா என ஒன்றுக்கு இரண்டு முறை யோசிப்பார். ஆனால் தீபக் சஹார் அல்லது ஷர்துல் தாகூர் களமிறங்கினால், முதல் பந்தில் இருந்தே பவுண்டரி அடிக்க முயற்சி செய்வார்கள். இதுபோன்ற மைதானங்களில் நல்ல ஹிட்டர்களிடமிருந்து ஒன்றிரண்டு பவுண்டரிகள் வந்தால் கூட ஆட்டத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அதனால் ஷர்துல் தாகூரை முன்கூட்டியே களமிறக்கினோம்’ என தோனி விளக்கம் கொடுத்துள்ளார்.
மற்ற செய்திகள்