'என்னது 'தல' தோனியும் டெல்லியில தான் இருக்காரா'!?.. சர்ப்ரைஸ் விசிட் அடித்த அமைச்சர் துறைமுருகன்!.. தீவிரமான ரசிகர்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பி ஆகியோர் நேரில் சந்தித்துள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக டெல்லி சென்றுள்ளார். கொரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்த காரணத்தினால் டெல்லிக்கு உடனடியாக செல்ல முடியாத சூழலில் பிரதமர் மோடியை நேற்று மாலை நேரில் சென்று சந்தித்தார்.
இதற்காக தனி விமானம் மூலம் டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தி.மு.க எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மற்றும் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அதைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக இன்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவா்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார்.
இந்நிலையில், டெல்லியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை திமுக பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் மற்றும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆகியோர் நேரில் சென்று சந்தித்துள்ளனர். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தோனியின் தீவிர ரசிகரான அமைச்சர் துரைமுருகன் ஏற்கனவே, கடந்த 2018ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்காக சென்னை வந்திருந்த தோனியை, நேரில் சந்தித்தார். அப்போது, ஐபிஎல் இறுதிப் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியதற்காக தோனிக்கு துரைமுருகன் வாழ்த்து தெரிவித்தார்.
இதையடுத்து, வாழ்த்து தெரிவித்த துரைமுருகனுக்கு பதிலுக்கு தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் நிற டி-ஷர்ட்டில் கையெழுத்துப் போட்டு பரிசளித்தார். அதை மகிழ்ச்சியுடன் துரைமுருகன் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்