"முன்னாடியே போட்ட பிளான்??".. மன்கட் அவுட் சர்ச்சை.. களத்தில் நடந்தது என்ன?.. விளக்கம் கொடுத்த தீப்தி சர்மா!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதி இருந்த போட்டியில், ரன் அவுட் ஒன்று கடும் சர்ச்சையை உண்டு பண்ணி இருந்த நிலையில், இதற்கான விளக்கத்தினை இந்திய அணி வீராங்கனை தீப்தி ஷர்மா தற்போது பகிர்ந்துள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, ஒரு நாள் மற்றும் டி 20 தொடர் ஆடுவதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது.
இதில், முதலாவதாக நடைபெற்ற டி 20 தொடரை இந்திய அணி இழந்திருந்த நிலையில், அதன் பின்னர் நடைபெற்ற ஒரு நாள் தொடரை 3 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.
இதில், மூன்றாவது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 169 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஏற்கனவே தொடரை இழந்த இங்கிலாந்து அணி, தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடி இருந்தது.
170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி வீராங்கனைகள் அடுத்தடுத்து அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். இறுதியாக 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஒரு விக்கெட் மட்டுமே எஞ்சியிருந்தது. அப்போது இந்திய அணியின் தீப்தி ஷர்மா நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த சார்லட் டீன்-ஐ ரன் அவுட் செய்தார். இதன் மூலம் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
கிரிக்கெட் விதிப்படி நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் உள்ள பேட்ஸ்மேனை அவுட் செய்ய முடியும் என்ற போதிலும், பலரும் தீப்தி ஷர்மா செயலுக்கு எதிர்ப்புகளை தெரிவித்திருந்தனர். ஒரு பக்கம் ஆதரவு இருந்த போதிலும், கிரிக்கெட் வட்டாரத்தில் இந்த விஷயம் பெரிய பேசு பொருளாக மாறி இருந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அணி வீராங்கனை தீப்தி ஷர்மா தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.
"அது எங்களின் திட்டம் தான். ஏனெனில், பந்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பாகவே கிரீஸை விட்டு வெளியேறி ரன் எடுக்க முயன்றார் சார்லட். அதற்கு முன்பாகவே அவரிடம் சில முறை நாங்கள் இது தொடர்பாக எச்சரித்து இருந்தோம். நடுவரிடம் இது பற்றி நாங்கள் குறிப்பிட்டிருந்தோம். அப்படி இருந்தும் அதனை மீண்டும் மீண்டும் சார்லட் செய்து கொண்டிருந்தார். அதனால், விதிகளுக்கு உட்பட்டு அவரை அவுட் செய்தோம். இதில் தவறு எதுவும் இல்லை" என தீப்தி தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர்கள் உட்பட பல கிரிக்கெட் பிரபலங்கள், இந்த ரன் அவுட் தொடர்பாக தங்களின் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், போட்டியில் நடந்தது பற்றி தற்போது தீப்தி சர்மா விளக்கம் கொடுத்துள்ளார்.
Also Read | Miss TamilNadu : வென்று காட்டிய கூலி தொழிலாளி மகள்.. "சின்ன வயசுல இருந்தே விடாமுயற்சி".. உருகும் பெற்றோர்!!
மற்ற செய்திகள்