'முக்கிய' வீரர் இல்லாமல் களமிறங்கும் 'மும்பை' இந்தியன்ஸ்.. "அவருக்கு பதிலா ஆடப் போறது இவரு தான்?!".. மும்பை அணி வெளியிட்ட தகவல்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக, ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெற்றிருந்த நிலையில், இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர், இந்தியாவில் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறவுள்ளது.
இதன் முதல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள், இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த இரண்டு சீசன்களிலும், கோப்பையை கைப்பற்றி, பலம் வாய்ந்த அணியாக விளங்கும் மும்பை அணி, மூன்றாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைக்கும் நோக்கில் உள்ளது.
இதனிடையே, மும்பை அணியின் முக்கிய வீரர் ஒருவர் இன்று களமிறங்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை அணியில், கடந்த இரண்டு சீசன்களில், தொடக்க வீரராக களமிறங்கி வந்த தென்னாபிரிக்க வீரர் டி காக் (Quinton De Kock), சில தினங்களுக்கு முன்பு தான் மும்பை அணியுடன் இணைந்தார்.
தற்போது, கொரோனா தொற்று பரவல் காரணமாக, அனைத்து வீரர்களும் சில தினங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு தான் பயிற்சிகள் மற்றும் போட்டிகளில் பங்குபெற முடியும். இதனால், டி காக் இன்றைய போட்டியில் களமிறங்கமாட்டார் என மும்பை அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, டி காக் மற்றும் ரோஹித் ஆகியோர், மும்பை அணியின் இன்னிங்ஸை கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடங்கிய நிலையில், இன்றைய போட்டியில், புது ஜோடிகள் தொடக்க வீரர்களாக களமிறங்கலாம் என கூறப்படுகிறது.
இதில், கடந்த சீசனில் மும்பை அணியுடன் இணைந்த கிறிஸ் லின் (Chris Lynn), ஒரு போட்டியில் கூட களமிறக்கப்படவில்லை. தொடக்க வீரரான அவர், இன்றைய போட்டியில் டி காக் இடத்தை நிரப்பலாம் எனவும் கூறப்படுகிறது.
ஒரு சீசன் முழுவதும் வாய்ப்பே கிடைக்காமல் இருந்த கிறிஸ் லின், இன்றைய போட்டியில் களமிறங்கி அசத்தும் பட்சத்தில், தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்