எதை எதோட கனெக்ட் பண்றீங்க..! கடைசி நேரத்துல ஐபிஎல்ல இருந்து ‘விலக’ என்ன காரணம்..? இங்கிலாந்து வீரர் விளக்கம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் இருந்து திடீரென விலகியது குறித்து இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் விளக்கம் கொடுத்துள்ளார்.
ஐபிஎல் 14-வது சீசனின் இரண்டாம் கட்ட போட்டிகள் வரும் செப்டம்பா் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பா் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இதனிடையே பல வெளிநாட்டு வீரர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி வருகின்றனர்.
முன்னதாக இங்கிலாந்து வீரர்களான பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்சர் ஆகியோர் விலகினர். சமீபத்தில் ஜானி பேர்ஸ்டோ, கிறிஸ் வோக்ஸ், ஜோஸ் பட்லர், டேவிட் மலான் ஆகிய இங்கிலாந்து வீரர்கள் திடீரென ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.
சமீபத்தில் மான்செஸ்டரில் நடைபெற இருந்த இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்திய அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் பிசியோவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் ஐபிஎல் தொடரை மனதில் வைத்துதான் இப்போட்டி ரத்து செய்யப்பட்டதாக முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் பலர் குற்றம் சாட்டினர். அதனால்தான் இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரை புறக்கணிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.
இந்த நிலையில், ஐபிஎல் போட்டியில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் விளக்கமளித்துள்ளார். அதில், ‘டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவேன் என நான் நினைக்கவில்லை. இந்த சூழலில் ஐபிஎல் தொடரின் அட்டவணை மாற்றப்பட்டது. டி20 உலகக்கோப்பை, ஆஷஸ் போட்டி என அடுத்தடுத்து முக்கியமான போட்டிகள் நடைபெற உள்ளன. அதனால், குறைந்த நாட்களில் நிறைய போட்டிகளில் விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்று எனக்கும் விருப்பம்தான். ஆனால், ஏதாவது ஒரு போட்டியிலிருந்து விலக வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இப்போது இந்த முடிவை எடுக்காவிட்டால், பின் எந்த போட்டியிலும் விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டுவிடும்’ என கிறிஸ் வோக்ஸ் கூறினார். மேலும், இதற்கும் மான்செஸ்டர் டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர் கூறினார்.
ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சார்பாக கிறிஸ் வோக்ஸ் விளையாடி வந்தார். தற்போது அவர் விலகியுள்ளதால், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பென் துவார்ஷியல் டெல்லி அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடர் முடிந்த சில நாட்களிலேயே டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அதனால் நீண்ட நாட்கள் பயோ பபுளில் இருக்க வேண்டும் நிலை ஏற்படும் என்பதால், வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக சொல்லப்படுகிறது.
மற்ற செய்திகள்