எவ்ளோ பெரிய கொடும தெரியுமா அது.. சின்ன பசங்க என்ன நெனப்பாங்க??..உடைந்து போன வார்னர்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியா : ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர், கடந்த ஆண்டு தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் ஒன்றைக் குறித்து தற்போது மிகவும் வேதனையுடன் மனம் திறந்துள்ளார்.

எவ்ளோ பெரிய கொடும தெரியுமா அது.. சின்ன பசங்க என்ன நெனப்பாங்க??..உடைந்து போன வார்னர்

ஆஸ்திரேலியா அணியில் அதிரடி தொடக்க வீரரான டேவிட் வார்னர், இங்கிலாந்து  அணிக்கு எதிராக  தற்போது நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் ஆடி வருகிறார்.

ஆஸ்திரேலிய அணியில் ஆடம் கில்க்றிஸ்ட், மேத்யூ ஹெய்டன் போன்ற அதிரடி தொடக்க வீரர்களுக்கு பிறகு, ஆஸ்திரேலிய அணி கண்ட சிறந்த தொடக்க வீரர் டேவிட் வார்னர் என்றே சொல்லலாம்.

அதிரடி வீரர்

டி 20, ஐம்பது ஓவர், டெஸ்ட் போட்டி என அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும், டேவிட் வார்னர் பல சிறப்பான அதிரடி இன்னிங்ஸ்களை அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக ஆடியிருந்தார். இவரது தலைமையில், கடந்த 2016 ஆம் ஆண்டு, ஹைதராபாத் அணி ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றி அசத்தியிருந்தது.

உடைந்து போன வார்னர்

சன் ரைசர்ஸ் அணி ஒரு முறை மட்டுமே ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ள நிலையில், அதுவும் வார்னர் தலைமையில் தான் நடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஹைதராபாத் அணிக்காக ஆடி வந்த டேவிட் வார்னர், கடந்த 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பல சோகங்களை சந்தித்திருந்தார். ஐபிஎல் 2021 ஆம் ஆண்டு தொடரின் ஆரம்பத்தில், டேவிட் வார்னர் தலைமையில் தான் ஹைதராபாத் அணி ஆடி வந்தது.

கடுமையான விமர்சனம்

ஆனால், இவரது தலைமையில், தொடர் தோல்விகளை அடைந்ததால், ஹைதராபாத் அணி, வார்னரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி, ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக கேன் வில்லியம்சனை நியமித்திருந்தது. அதே போல, ஆடும் லெவனிலும் வார்னருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. கேப்டன் மாற்றப்பட்ட போதும், ஹைதராபாத் அணி புள்ளிப் பட்டியலில், கடைசி இடத்தைத் தான் பிடித்திருந்தது.

மனம் திறந்த வார்னர்

இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் 2022 ஆம் ஆண்டு தொடருக்கு முன்பாக, டேவிட் வார்னரை தக்க வைத்துக் கொள்ளாமல், அணியில் இருந்து வெளியேற்றியிருந்தது. அதன் பிறகு, டி 20 உலக கோப்பை மற்றும் ஆஷஸ் தொடரில் வார்னர் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார். இந்நிலையில், சன் ரைசர்ஸ் அணியில் இருந்து தான் வெளியேற்றப்பட்டது குறித்து, டேவிட் வார்னர் மனம் திறந்துள்ளார்.

உங்க மெசேஜ் என்ன?

'நீங்கள் உங்களின் கேப்டனை அணியில் இருந்து நீக்க முடிவு செய்து, அவரை அணியிலும் இடம்பெறாமல் செய்தால், அணியிலுள்ள இளம் வீரர்களுக்கு நீங்கள் சொல்லும் மெசேஜ் என்ன?. அணியிலுள்ள மற்ற வீரர்களுக்கு இந்த விஷயம் எப்படி போய் சேரும்?. அவர்கள் அனைவரும், நாளைக்கு நமக்கும் இதே நிலைமை தானோ என்ற பயம் தான் வரும். அது தான் என்னை மிகவும் வேதனை அடையச் செய்தது.

ரசிகர்கள் ஏமாற்றம்

உங்களுக்கு ஒரு விஷயத்தைப் பற்றி பேச வேண்டும் என்றால், அதனைச் செய்யுங்கள். அவ்வளவு கடினம் ஒன்றுமில்லை. நான் ஒன்றும் உங்களை கடித்து விட மாட்டேன். நான் அமைதியாக இருந்து, நீங்கள் என்னை வெளியேற்றச் சொல்லும் காரணங்களைக் கேட்டு கொண்டு தான் இருப்பேன். ரசிகர்கள் அடையும் ஏமாற்றங்களும் எனக்கு வேதனையை உருவாக்கியது.

மனக்குமுறல்

ரசிகர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். அவர்கள் தான் உங்களின் அணி, பிரபலம் அடைய காரணம் ஆனவர்கள். ஒரு வீரரிடம் ரசிகர்கள் பங்கு என்பது மிக மிக அதிகம். சச்சின், விராட், நான், வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் போல ஆக வேண்டும் என பலரும் ஆசைப்படுவார்கள்.

ஆனால், இப்படி நமக்கு நடக்கும் போது,அவர்கள் நிச்சயம் ஏமாற்றம் அடைவார்கள். அதுவும் என்னை அதிகம் காயப்படுத்துகிறது' என மிகுந்த  வேதனையில், தனது மனக் குமுறல்களை டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

DAVID WARNER, SRH, KANE WILLIAMSON, டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

மற்ற செய்திகள்