RCB அணியின் புதிய கேப்டன்..? ‘கோலியும் இவரைத்தான் ஆதரிப்பார்’.. முன்னாள் கோச் கொடுத்த அசத்தல் அப்டேட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ள வீரர் குறித்து டேனியல் வெட்டோரி கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் அடுத்த ஆண்டு முதல் அகமதாபாத், லக்னோ என்ற 2 புதிய அணிகள் இணைய உள்ளன. அதனால் அனைத்து அணியில் உள்ள வீரர்களும் கலைக்கப்பட்டு புதிதாக ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி வழங்கியது. அதன்படி கடந்த நவம்பர் 30-ம் தேதி அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்த வீரர்களின் பட்டியலை அறிவித்தன.
அதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விராட் கோலி, மேக்ஸ்வெல், முகமது சிராஜ் ஆகிய 3 வீரர்களை தக்க வைத்துள்ளது. கடந்த ஐபிஎல் தொடருடன் ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட்கோலி விலகியுள்ளார். அதனால் புதிய கேப்டனாக யாரை நியமிப்பது என்று அந்த அணி ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர், ஆர்சி அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளருமான டேனியல் வெட்டோரி இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘ஆர்சிபி அணிக்கு புதிய கேப்டனாக மேக்ஸ்வெல்தான் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் கடந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக 15 போட்டிகளில் விளையாடி அவர் 513 ரன்களை குவித்துள்ளார், அதில் 6 அரைசதங்கள் அடங்கும்.
அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஷ் டி20 தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை கேப்டனாக இருந்து மேக்ஸ்வெல் சிறப்பாக வழி நடத்தியுள்ளார். அதனால் விராட் கோலியும் இவரைத்தான் ஆதரிப்பார். ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைத்த வீரர்களில் ஒருவரைத்தான் கேப்டனாக நியமிக்க முயற்சி செய்யும். அப்படிப் பார்த்தால் முகமது சிராஜ் இளம் வீரர், அதனால் மேக்ஸ்வெல்லுக்கு அதிக வாய்ப்பு உள்ளது’ என டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.
முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ஜேசன் ஹோல்டர், ஆர்சி அணிக்கு புதிய கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ளதாக, இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறினார். இவர் கடந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சார்பாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்