‘நான் பயத்துல ஒளிஞ்சிக்கிட்டேன், ஆனா தோனி...!’.. KKR-க்கு எதிரான த்ரில் வெற்றியின்போது நடந்த ‘சுவாரஸ்ய’ சம்பவத்தை பகிர்ந்த ருதுராஜ்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தா அணிக்கு எதிரான த்ரில் வெற்றி குறித்து சிஎஸ்கே அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் பகிர்ந்துள்ளார்.
தோனி (Dhoni) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கும், இயான் மோர்கன் (Eoin Morgan) தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கும் இடையேயான ஐபிஎல் (IPL) லீக் போட்டி நேற்று முன்தினம் அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை எடுத்தது. அதில் அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 45 ரன்களும், நிதிஷ் ரானா 37 ரன்களும் எடுத்திருந்தனர். சென்னை அணியைப் பொறுத்தவரை ஜோஸ் ஹசில்வுட் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஜடேஜா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை அடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட்டும், டு பிளசிஸும் களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய இந்த ஜோடி 50 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைந்தது. அப்போது ரசல் வீசிய 9-வது ஓவரில் இயான் மோர்கனிடம் கேட்ச் கொடுத்து ருதுராஜ் கெய்க்வாட் (40 ரன்கள்) அவுட்டானார்.
இதனைத் தொடர்ந்து பிரஷித் கிருஷ்ணா ஓவரில் டு பிளசிஸும் (43 ரன்கள்) அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து மொயில் அலி 32 ரன்களிலும், அம்பட்டி ராயுடு 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்த சமயத்தில் கேப்டன் தோனியும், சுரேஷ் ரெய்னாவும் ஜோடி சேர்ந்தனர். அப்போது சுரேஷ் ரெய்னா (11 ரன்கள்) எதிர்பாராத விதமாக ரன் அவுட்டாகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து தோனி 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
இந்த இக்கட்டான சூழலில் களமிறங்கிய ஆல்ரவுண்டர் ஜடேஜா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்போது பிரஷித் கிருஷ்ணா வீசிய 19-வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி அடித்து ஜடேஜா அதிரடி காட்டினார். இது ஆட்டத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
ஆனால் சுனில் நரேன் வீசிய கடைசி ஓவரில் 5-வது பந்தில் எல்பிடபுள்யூ ஆகி ஜடேஜா வெளியேறினார். இதனால் கடைசி 1 பந்துக்கு 1 ரன் அடித்தால் வெற்றி என்ற நிலையில் சிஎஸ்கே அணி இருந்தது. அப்போது களமிறங்கிய தீபக் சஹார் 1 ரன் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார்.
இந்த நிலையில், இப்போட்டியில் வெற்றி பெற்றது குறித்து சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) பகிர்ந்துள்ளார். அதில், ‘இப்போட்டியின் கடைசி ஓவரின் போது நான் மிகவும் பதற்றமாக இருந்தேன். எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என போட்டியை பயத்துடனே பார்த்துக் கொண்டிருந்தேன்.
குறிப்பாக கடைசி ஓவரின் போது போட்டியைப் பார்க்க பயந்து வீரர் ஒருவரின் பின் ஒளிந்துகொண்டேன். கடைசி பந்து வரை பதற்றமாகவே இருந்தேன். ஆனால் தோனி எப்போதும் போல கூலாக அமர்ந்து போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தார்’ என ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்