"'தோனி'ய அடுத்த வருஷம் வெளிய விட்ருங்க, அதுக்கு பதிலா..." - 'சிஎஸ்கே' அணிக்கு ஐடியா சொன்ன ஆகாஷ் சோப்ரா!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் அனைத்து ஆண்டிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் புள்ளிப் பட்டியலில் 7 ஆவது இடம் பெற்று வெளியேறியது.
அணியில் இடம்பெற்றிருந்த சீனியர் வீரர்கள் யாரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதிலும் குறிப்பாக, கேப்டன் தோனியும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். சர்வதேச போட்டிகளில் இருந்து இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வை அறிவித்த தோனி, அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆடுவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், தான் அடுத்த சீசனிலும் ஆடப் போவதை தோனியே உறுதி செய்திருந்தார்.
இந்த முறை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்ற நிலையில், அடுத்த ஆண்டு இந்தியாவில் ஏப்ரல் மாதம் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல, அடுத்த ஆண்டு புதிய ஐபிஎல் அணியும் கலந்து கொள்ளப் போவதாக தகவல் ஒன்றும் பரவி வரும் நிலையில், அடுத்த சீசனுக்கு முன்னால் மிகப்பெரிய ஏலம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு ஏலம் நடைபெறும் என்றால், தோனியை சென்னை அணி தக்க வைத்துக் கொள்ளாமல் விடுவித்து மீண்டும் அவரை ஏலத்தில் எடுக்க வேண்டுமென முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதன் மூலம் 15 கோடி ரூபாய் செலவு செய்யப்பட வேண்டிய நிலை ஏற்படாது என்றும் ஆகாஷ் சோப்ரா குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு சேமிக்கப்படும் தொகையைக் கொண்டு பல சிறப்பான வீரர்களை அணியில் இணைக்க முடியும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். தற்போதுள்ள சூழலில் சென்னை அணிக்கு ஏலம் நடைபெறுவது அவசியமான ஒன்று என்றும் அவர் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்