‘தோனியை நேர்ல பார்த்தா போதும்னு நெனச்சேன்’!.. ‘இப்போ அவர்கூடவே ஒன்னா பிராக்டீஸ்’.. இளம் தமிழக வீரரின் ‘Fanboy’ மொமண்ட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதோனியுடன் விளையாட உள்ளது குறித்து சிஎஸ்கே அணியின் இளம்வீரர் ஹரி நிஷாந்த் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
14-வது சீசன் ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் மாதம் 9-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் ஆயத்தமாகி வருகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொருத்தவரை, அணியின் கேப்டன் தோனி உட்பட பலர் வீரர்கள் தற்போதே பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் தொடரில், சிஎஸ்கே முதல்முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறியது. இது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. அதனால் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரை வெல்லும் முனைப்பில் சென்னை அணி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் ராபின் உத்தப்பா, புஜாரா போன்ற இந்திய வீரர்களை சென்னை அணி ஏலத்தில் எடுத்தது. அதேபோல் தமிழக வீரர் ஹரி நிஷாந்த் உள்ளிட்ட இளம் வீரர்களை சிஎஸ்கே ஏலத்தில் எடுத்தது. அப்போது சென்னை அணியில் இடம்பெற்றது குறித்து தெரிவித்த ஹரி நிஷாந்த், தோனியை நேரில் காணவேண்டும் என்பதே தனது வாழ்நாள் கனவாக இருந்ததாகவும், ஆனால் தற்போது அவருடன் விளையாடப் போகிறேன் என்பதை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என்றும் உற்சாகமாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனியுடன் பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஹரி நிஷாந்த், அதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அதில், ‘உங்களை பார்த்துதான் வளர்ந்தோம். கடினமான நேரத்தில் நாட்டுக்காகவும், சிஎஸ்கே அணிக்காவும் பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளீர்கள். தற்போது உங்களுடன் டிரெஸ்ஸிங் ரூமை பகிர்வதை நினைத்தால் பெருமையாக உள்ளது. கனவு நனவாகியுள்ளது. தல’ என ஹரி நிஷாந்த் தோனியை புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்