'ரெய்னா'வை குறி வைக்காத 'சிஎஸ்கே'.. ஏமாந்த ரசிகர்கள்.. "அவர நாங்க எடுக்காம போனது இதுனால தான்.." வெளியான காரணம்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் மெகா ஏலம், கடந்த இரண்டு நாட்கள், பெங்களூரில் வைத்து மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.
இதில், அனைத்து அணிகளும் தங்களின் அணியயில் சிறப்பான வீரர்களை தேர்வு செய்துள்ளனர். மேலும், சில வீரர்களை அணியில் சேர்க்க, பல அணிகள் முட்டி மோதிக் கொண்ட சம்பவங்களும், அதிகம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியிருந்தது.
எதிர்பாராத வீரர்கள், அதிக தொகைக்கு ஏலம் போன நிலையில், ஐபிஎல் தொடரில் ஜொலித்த பல சீனியர் வீரர்களை எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்க முன் வரவில்லை. அந்த வகையில், ஐபிஎல் ஏலத்தில், அதிகம் கேள்விகளை உண்டு பண்ணிய ஒரு நிகழ்வு என்றால், ரெய்னாவை சிஎஸ்கே அணி, ஏலத்தில் எடுக்க முயலாமல் போனது தான்.
சுரேஷ் ரெய்னா
Mr. IPL என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை எந்த அணிகளும் எடுக்கவில்லை. ஐபிஎல் என்றாலே, நமது ஞாபகத்துக்கு உடனடியாக வரும் சுரேஷ் ரெய்னா, ஏலத்தில் 'Unsold' என அறிவிக்கப்பட்டது, ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
சிஎஸ்கே அணியின் முடிவு
அதே போல, சென்னை அணியின் 'சின்ன தல' என ரெய்னா வலம் வந்த நிலையில், அந்த அணி கூட ரெய்னாவை எடுக்க முயலாதது தான், ரசிகர்களை அதிக அளவில் ஏமாற்றியிருந்தது. ஏலத்தின் முதல் நாளில், சென்னை அணி மொத்தம் 6 வீரர்களை எடுத்திருந்தது. இதில், பிராவோ, உத்தப்பா, தீபக் சாஹர் உள்ளிட்ட 5 பேர், கடந்த ஆண்டு சென்னை அணியில் ஆடிய வீரர்கள் தான்.
ரெய்னா, டு பிளஸ்ஸிஸ்
அவர்களை எல்லாம் மீண்டும் குறி வைத்து தூக்கிய சிஎஸ்கே, ரெய்னா மற்றும் டு பிளஸ்ஸிஸ் ஆகிய வீரர்களை ஏன் ஏலத்தில் எடுக்க முயற்சி செய்யவில்லை என்பது தான் கிரிக்கெட் ரசிகர்களின் கேள்வியாக இருந்தது. இதில், டு பிளஸ்ஸிஸை பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்திருந்தது. ஆனால், ரெய்னாவை தான் எந்த அணியும் தேர்வு செய்ய முனைப்பு காட்டவில்லை.
ரெய்னா இல்லாத ஐபிஎல் தொடர் என்பதால், அவரது ரசிகர்கள் கடும் வருத்தத்தில் உள்ளனர். சென்னை அணியையும், இதற்காக பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ரெய்னாவை ஏன் ஏலத்தில் எடுக்கவில்லை என்பது பற்றி, சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கமளித்துள்ளார்.
மிஸ் செய்கிறோம்
'கடந்த 12 ஆண்டுகளாக, சிஎஸ்கே அணிக்கு வேண்டி, ஒரு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தவர் சுரேஷ் ரெய்னா. அவர் இந்த முறை அணியில் இல்லாமல் போனது, நிச்சயம் ஒரு கடினமான காரியம் தான். ஆனால், அதே வேளையில், அணியின் அமைப்பை பொறுத்து வீரர்கள் தேர்வாவார்கள் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவரின் ஃபார்ம் மற்றும் இதர விஷயங்களை பார்த்து, அவரைத் தேர்வு செய்ய தான், எந்த அணியாக இருந்தாலும் முடிவெடுக்கும். இது தான், ரெய்னா அணிக்கு பொருத்தமாக இருக்க மாட்டார் என்பதற்கு மிக முக்கிய காரணம். எங்களுடன் ஒரு தசாப்தமாக இருந்த ரெய்னாவையும், டு பிளெஸ்ஸிஸையும் மிஸ் செய்கிறோம். அப்படி தான் ஏலத்தின் செயல்முறை இருக்கும்' என தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் அளித்துள்ள விளக்கம் குறித்தும், ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை இணையத்தில் குறிப்பிட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்