சென்னைக்கு மட்டும் ஏன் ‘இப்டியெல்லாம்’ நடக்குது?.. ‘ரிப்போர்ட்’ வந்துருச்சு.. சிஎஸ்கே CEO சொன்ன ‘அதிகாரப்பூர்வ’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி அணிக்கு எதிரான போட்டியில் காயமடைந்த சென்னை அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ அடுத்த போட்டிகளில் விளையாடுவது குறித்த முக்கிய தகவலை சிஎஸ்கே சிஇஓ தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ராஜாவாக வலம் வந்த தோனி தலைமையிலான சென்னை அணி, இந்த வருட தொடரில் மிக மோசமான நிலையை சந்தித்து வருகிறது. இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றிபெற்று 6 போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற வேண்டிய சூழ்நிலை இருந்தும் மோசமான பீல்டிங் காரணமாக சென்னை அணி தோல்வியை தழுவியது.
அந்த வகையில் போட்டியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கடைசி ஓவரை வீச வேண்டிய பிராவோ காயம் காரணமாக பந்துவீச முடியாமல் போனது சென்னை அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. பிராவோ இருந்திருந்தால் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஒருவேளை வெற்றி பெற்றிருக்கலாம் என ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் ரசிகர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி செய்தியாக பிராவோ அடுத்த சில போட்டிகளில் விளையாட மாட்டார் என சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்க் தெரிவித்தார்.
இதனை தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து கூறிய அவர், பிராவோவிற்கு ஏற்பட்ட காயத்தின் தன்மை குறித்த ரிப்போர்ட் கிடைத்துவிட்டது. அவரால் 2 போட்டிகள் அல்லது 2 வாரங்கள் விளையாட முடியாது. பிராவோவிற்கு பதிலாக மாற்று வீரரை அணியில் சேர்க்கும் திட்டம் எதுவும் இல்லை. ஒரு வீரரை புதிதாக எடுத்தால் அது சரியாகவும் இருக்காது. கொரோனா காரணமாக அவரது தனிமைப்படுத்தப்படும் நாட்கள் முடிவதற்குள் ஐபிஎல் தொடரே முடிந்துவிடும். அதேபோல் பிராவோவும் இந்த தொடரில் இருந்து முழுமையாக விலகவில்லை. அவருக்கு ஏற்பட்டுள்ள காயமும் அவ்வளவு தீவிரமானதாக இல்லை’ என அவர் கூறியுள்ளார்.
தற்போது சென்னை அணி ப்ளே ஆஃப் செல்லவேண்டுமானால் இனி விளையாட உள்ள 5 போட்டிகளிலும் வெற்றிபெற்றே ஆகவேண்டும். இதுபோன்ற சூழ்நிலையில் சென்னை அணியின் டெத் ஓவர் பலமாக காணப்பட்ட பிராவோ இல்லாதது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதனால் இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் உள்ள இம்ரான் தாகீர் இன்றைய ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்