"இந்த விஷயத்துல அவர அடிச்சுக்கவே முடியாது.. செம 'புத்திசாலி'ங்க அவரு.." 'தோனி'யின் 'சீக்ரெட்' பற்றி மனம் திறந்த 'சேவாக்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 14 ஆவது ஐபிஎல் சீசனில், இதுவரை மூன்று போட்டிகளில் ஆடியுள்ள நிலையில், இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
முதல் போட்டியில் தோல்வியுடன் சிஎஸ்கே அணி ஆரம்பித்ததால், கடந்த சீசனைப் போல, சொதப்புவார்கள் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அதன் பிறகு பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில், பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அதிக தாக்கத்தை சென்னை வீரர்கள் ஏற்படுத்தி, ரசிகர்களிடையே அதிக நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளனர்.
இதில், நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிராக சென்னை அணி பெற்ற வெற்றிக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை அணியின் வெற்றி குறித்து சில கருத்துக்களை இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் (Sehwag) தெரிவித்துள்ளார்.
'ஒரு பந்து வீச்சாளரைப் பொறுத்தவரையில், ஸ்விங் மற்றும் ஸ்பின் ஆகியவற்றை எப்படி, எப்போது பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி அறிந்திருக்க வேண்டும். சென்னை அணிக்கு எதிராக ஆடிய ராஜஸ்தான் அணி வீரர் பட்லர், 70 முதல் 80 ரன்களை அடித்திருந்தால், நிச்சயம் தனது அணிக்கு அவர் வெற்றியைத் தேடிக் கொடுத்திருப்பார். ஆனால், ஸ்பின் பந்து வீச்சுக்கு உதவியாக பிட்ச் இருந்தது தான் வித்தியாசத்தை உண்டு பண்ணியது.
இதனை அறிந்து கொண்டு, சிஎஸ்கே பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அவர்கள் நல்ல பந்து வீச்சாளர்கள் என்பதால் மட்டும் இது நிகழவில்லை. அவர்களின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் தோனியின் (Dhoni) வழிகாட்டுதலின் மூலம் தான் இது நிகழ்ந்தது. தோனி மிகவும் புத்திசாலி. தன்னுடைய பந்து வீச்சாளர்களுக்கு என்ன ஆலோசனை வழங்குவது, ஒரு பந்து வீச்சாளரிடம் இருந்து எப்படியான பந்து வீச்சு வெளிவர வேண்டும் என்பதை தோனி நன்கு அறிந்தவர்.
ஜடேஜா ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை எடுத்ததும், அடுத்த ஓவரிலேயே மொயின் அலியை பந்து வீசச் செய்தார் தோனி. ஏனென்றால், ஜடேஜாவை போலவே மொயின் அலி பந்து வீசுவார் என்பது தோனிக்கு தெரியும்.
தோனியின் கேப்டன்சியை பொறுத்தவரையில், அவர் அதிர்ஷ்டசாலி என கூறப்படுகிறது. ஆனால், அதிர்ஷ்டம் என்பதைத் தாண்டி, போட்டிக்கு நடுவே அவர் நிகழ்த்தும் மாற்றங்களுடன், அதிர்ஷ்டமும் அவருக்கு சாதகமாக அமைகிறது' என சிஎஸ்கே அணி மற்றும் தோனியை பாராட்டி, சேவாக் பேசியுள்ளார்.
மற்ற செய்திகள்