சென்னையில் வட்டிக்கு பணம் கொடுத்து ஏமாந்ததாக ஹர்பஜன் சிங் 'பரபரப்பு' புகார்!.. வெளியான அதிர்ச்சி தகவல்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னையில் வட்டிக்கு பணம் கொடுத்துள்ள ஹர்பஜன்சிங், தன்னை கைது செய்ய திட்டமிட்டு காவல்துறையில் புகார் கொடுத்துள்ளதாக வாலிபர் ஒருவர் முன்ஜாமீன் கேட்டுள்ளார்.
சென்னை உத்தண்டியை சேர்ந்த மகேஷ் மற்றும் பிரபா சேகர் என்பவர்கள், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங்கிடம் இருந்து கடந்த 2015-ஆம் ஆண்டு 4 கோடி கடன் வாங்கியுள்ளனர். இதற்காக, தங்களின் அசையா சொத்தை ஈடு கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மகேஷ் முன்ஜாமீன் கேட்டு மனு செய்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது, ''கடந்த 2015-ஆம் ஆண்டு ஹர்பஜன்சிங்கிடத்தில் ரூ. 4 கோடி கடன் வாங்கினோம். ரூ.4 கோடியே 5 லட்சம் திருப்பி கொடுத்து விட்டோம். தற்போது, வட்டித் தொகையை குறைப்பது தொடர்பாக அவரிடத்தில் பேசி வருகிறேன். ஏற்கெனவே, ஹர்பஜன் சிங்கிடத்தில் கையொப்பமிட்டு தொகை எழுதப்படாத 8 காசோலைகளை கொடுத்திருந்தேன். இதற்கிடையே, வங்கிக்கு என் காசோலைகள் வந்தால் பணம் தர வேண்டாமென்றும் கடிதம் அளித்திருந்தேன்.
ஹர்பஜன் சிங்கிடத்தில் வட்டியை குறைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் அவர், காசோலை ஒன்றில் ரூ. 25 லட்சத்துக்கு தொகை எழுதி வங்கியில் டெபாசிட்டுக்கு அனுப்பியுள்ளார். என் கணக்கிலிருந்து பணத்தை வழங்க வேண்டாமென்று ஏற்கெனவே நான் வங்கிக்கு கடிதம் அளித்திருந்த காரணத்தினால், ஹர்பஜன் அனுப்பிய காசோலை திருப்பி அனுப்பப்பட்டு விட்டது.
இந்த நிலையில், என்னை வேண்டுமென்றே சிக்க வைக்க வேண்டுமென்பதற்காக நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் ஹர்பஜன்சிங் புகார் அளித்துள்ளார்.
கடன் தொகையின் பெரும் பகுதியை நான் திருப்பி செலுத்தியுள்ளேன். அவரை ஏமாற்றினேன் என்ற குற்றச்சாட்டே எழாத நிலையில், என்னை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனவே, எனக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
இந்த மனு, நீதிபதி ஏ.டி.கே. ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, காவல்துறையினர் ஆரம்பகட்ட விசாரணையில் உள்ளனர். எனவே, மனுதாரர் தகுந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். புகாரின் மீது வழக்குப்பதிவு செய்தால் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறி விசாரணையை முடித்து வைத்தார்.
மற்ற செய்திகள்