தோனிக்கு நன்றி.. ஜடேஜாவுக்கு வாழ்த்து.. இன்ஸ்டாவில் பிராவோ போட்ட பதிவு.. ரசிகர்கள் உருக்கம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகியது குறித்தும், ஜடேஜா புதிய கேப்டனாக பொறுப்பேற்றது குறித்தும் பிராவோ வாழ்த்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி நேற்று விலகினார். இதனை அடுத்து அந்த அணியின் ஆல்-ரவுண்டர் ஜடேஜா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தோனியின் இந்த திடீர் முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், ஜடேஜா கேப்டனாக பொறுப்பேற்றது ஆறுதல் அளித்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி நான்கு முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் 11 முறை ப்ளே ஆஃப் சுற்று வரை சென்றுள்ளது. எந்த அணியும் இந்த சாதனையை செய்தது இல்லை. கடந்த 2020-ம் ஆண்டு மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் சென்னை அணி வெளியேறியது.
நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி வரும் 26-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன. ஜடேஜா கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டி இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பிராவோ, தோனி மற்றும் ஜடேஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், ‘எல்லாவற்றுக்கும் நன்றி தோனி. உங்களுடைய சம்ராஜ்யம் எப்போதும் உயிர்ப்புடன் இருக்கும். சிஎஸ்கே அணியின் கேப்டன் தேர்வுக்கு ஜடேஜாவை விட சிறந்த நபர் இருக்க முடியாது. உங்களுடைய நேரம் ஆரம்பமாகிவிட்டது, வாழ்த்துக்கள் ஜடேஜா’ என பிராவோ வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு ஜடேஜா நன்றி என கமெண்ட் செய்துள்ளார்.
மற்ற செய்திகள்