"பழைய பன்னீர்செல்வமா திரும்பி வருவேன்'.. கிரிக்கெட் வீரர் நடராஜன் பேட்டி
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பது குறித்து தமிழக வீரர் யார்க்கர் கிங் நடராஜன் மனம் திறந்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணியில் இடம்பிடித்த நடராஜன், தனது துல்லியமான யாக்கரால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். குறிப்பாக இறுதி ஓவர்களில் நடராஜனின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், ஜாம்பவான் பேட்ஸ்மேன்களே திணறினர். இதனால், கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் நடராஜன் இடம்பிடித்தார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார்.
ஆஸ்திரேலியாவில் அசத்திய நடராஜன்
2020 - 2021ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த மூன்று விதமான போட்டிகளிலும் அறிமுகமான நடராஜன் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுகளையும் அள்ளினார். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் முடித்து சொந்த ஊர் திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு முழங்கால் காயம் காரணமாக 2021 ஆண்டு முழுவதும் அவதிப்பட்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில், ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் இவர் இடம்பெற்றுள்ளார்.
நான் மீண்டும் வருவேன்
இதுகுறித்து ஒரு ஆங்கில தளத்திற்கு பேட்டி அளித்த நடராஜன், "ஐபிஎல் ஏலம் தொடர்பாக நான் பெரிதும் எதிர்பார்க்கவில்லை. 2022ஆம் ஆண்டில் ஐபிஎல், டி20 உலகக் கோப்பை உள்ளிட்ட பல முக்கியமான தொடர்கள் உள்ளன. நான் இவை எதிலும் கவனம் செலுத்தவில்லை. என்னுடைய முழு கவனமும் நன்றாக உடற்தகுதி பெற்று மீண்டும் பழைய நடராஜனாக வர வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் இருக்கிறது. இதை சரியாக செய்தாலே, மற்றவை தானாக நடந்துவிடும். நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் திரும்ப உள்ளதால் எனக்கு பதட்டமாக உள்ளது; பதட்டமில்லை என்று என்னால் பொய் சொல்ல முடியாது.
வெற்றி தோல்வி சகஜம்
நான் ஐபிஎல் தொடர் மற்றும் இந்திய அணிக்காக நன்றாக விளையாடி இருக்கிறேன். நான் திரும்பி வரும்போது, ரசிகர்கள் என்னுடைய அந்த ஆட்டத்தை எதிர்பார்ப்பார்கள். நான் ஓரிரு போட்டிகளில் களமிறங்க தொடங்கினால் அது சரியாகிவிடும். மீண்டும் பழைய நடராஜனாக திரும்பி வரவேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். இந்த இடைவேளையின் மூலம் எனக்கு ஒன்று தெளிவாக புரிந்தது. கிரிக்கெட் மற்றும் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்து வரும் என்பதை நன்கு புரிந்து கொண்டேன்.
ஊக்கம் தரும் ஜெய்பிரகாஷ் அண்ணா
கொரோனா காலத்தில் காயத்தில் இருந்து மீண்டு வருவது பெரிய சவாலாக அமைந்தது. தற்போது, தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்து கொண்டு தீவிரமாக பயிற்சி செய்து வருகிறேன். சக வீரர்களான வாஷிங்டன் சுந்தர், ஷ்யாம் பிரசாத் உள்ளிட்டவர்களுடன் மட்டும் பேசி வருகிறேன். வழக்கம் போல் என்னுடைய அண்ணா ஜெயப்பிரகாஷ் எனக்கு ஊக்கமான வார்த்தைகளை கூறி வருகிறார்" என்று நடராஜன் கூறினார்.
மற்ற செய்திகள்