'ஆட்டம் நம்மளோடதா இருக்கும்...'- இந்திய அணியை தூக்கி நிறுத்தும் புஜாரா
முகப்பு > செய்திகள் > விளையாட்டுந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் சட்டேஷ்வர் புஜாரா. அவர், தனிப்பட்ட முறையில் பேட்டிங் ஃபார்முக்காக கஷ்டப்பட்டு வரலாம். ஆனால், இந்திய அணி குறித்து மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறார் புஜாரா.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் வரும் 26-ம் தேதி தொடங்குகிறது.
இந்த டெஸ்ட் போட்டி என்பது மொத்த இந்திய அணிக்கும் சவால் நிறைந்ததாக இருக்கும். காரணம், இதுவரை இந்திய அணி, தென் ஆப்ரிக்க மண்ணில் ஒரேயொரு டெஸ்ட் தொடரில் கூட வெற்றி பெற்றதில்லை. இந்த முறை அந்த வரலாற்றை இந்தியா மாற்றப் பார்க்கும்.
இந்தியாவைப் பொறுத்தவரை பல திறமை வாய்ந்த இளம் வீரர்கள், சீனியர்களால் விளையாட முடியாத சூழல் நிலவுகிறது. உதாரணத்துக்கு ஸ்ரேயாஸ் ஐயர், மாயங்க் அகர்வால் ஆகியோர் விளையாடும் பட்சத்தில் சீனியர்கள் ரெஸ்ட்டில் வைக்கப்படுகிறார்கள். சீனியர் வீரர்களான சட்டேஷ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே ஆகியோர் சரியாக விளையாடததால் அவர்கள் மீது அழுத்தமும் அதிகமாக இருக்கிறது. தென் ஆப்ரிக்கத் தொடரில் இந்த இருவரும் சரியாக விளையாடவில்லை என்றால் இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் என்று பேசப்படுகிறது.
இப்படி பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புஜாரா, தென் ஆப்ரிக்கத் தொடர் குறித்துப் பேசுகையில், ‘இந்தியாவை விட்டு நீங்கள் எந்த நாட்டுக்குச் சென்றாலும் விளையாடும் சூழல் முற்றிலும் வேறாகத் தான் இருக்கும். மற்ற நாடுகளில் உள்ள பிட்சுகளில் அதிக பவுன்ஸ் இருக்கும். அதிக வேகம் இருக்கும். பந்து காற்றில் அதிகமாக ஸ்விங் ஆகக் கூடும். இதையெல்லாம் கணித்து தான் பேட்ஸ்மேன்கள் விளையாட வேண்டும். எனவே இந்தியாவுக்கு வெளியில் சென்று சிறப்பான ஆட்டத்தை விளையாடுவது என்பது மிகவும் சவாலான காரியம் தான்.
அதே நேரத்தில் தற்போதைய இந்திய அணியில் ஒரு பேலன்ஸ் உள்ளது. எந்த சூழலையும் சமாளித்து ஆடும் திறன் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். தென் ஆப்ரிக்கத் தொடருக்காக நாங்கள் நன்றாக பயிற்சி எடுத்துள்ளோம். எனவே எங்களால் மிகச் சிறந்த ஆட்டத்தை விளையாட முடியும் என்கிற முழு நம்பிக்கை இருக்கிறது.
தற்போதுள்ள இந்திய அணியின் பல வீரர்கள் இதற்கு முன்னரும் தென் ஆப்ரிக்காவில் விளையாடி இருக்கிறார்கள். அந்த அனுபவமும் இந்த முறை எங்களுக்குக் கை கொடுக்கும்.
எந்த நாட்டு அணியும் தங்கள் சொந்த மண்ணில் நன்றாகவே விளையாடுவார்கள். எனவே தென் ஆப்ரிக்காவும் நன்றாக விளையாடும் என்று எதிர்பார்க்கலாம். அவர்களிடம் மிகச் சிறந்த வேகப் பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை எதிர்கொள்வது சவாலாகத் தான் இருக்கும்’ என்று தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசியுள்ளார்.
மற்ற செய்திகள்