"அவன் 'தம்பி' இறந்த விஷயத்த கூட சொல்லாம மறச்சுட்டோம்.. '10' நாள் கழிச்சு அவனுக்கு தெரிஞ்சதும், என்ன ஆச்சு தெரியுமா??.." இளம் வீரரின் வாழ்க்கையில் நடந்த 'சோகம்'.! - கண்ணீருடன் பகிர்ந்த தாய்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு14 ஆவது ஐபிஎல் சீசனின் நான்காவது போட்டியில், ராஜஸ்தான் அணியை வீழ்த்தி, பஞ்சாப் அணி திரில் வெற்றி பெற்றது.
222 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியில், கேப்டன் சஞ்சு சாம்சன் (Sanju Samson) தனியாளாக நின்று அணியின் வெற்றிக்காக போராடினார். பந்துகளை சிக்சருக்கு விளாசி, சதமடித்து சாம்சன் அசத்திய போதும், நூலிழையில் வெற்றியைத் தவற விட்டார். இதனால், 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
முன்னதாக, இந்த போட்டியில், ஐபிஎல் தொடரில் அறிமுகமான ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் சேத்தன் சக்காரியா (Chetan Sakkariya), ராகுல், மயங்க் அகர்வால் உள்ளிட்ட 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து அசத்தியிருந்தார். உள்ளூர் மற்றும் முதல் தர போட்டிகளில் சாதித்துக் காட்டிய சேத்தன் சக்காரியாவை, ஐபிஎல் ஏலத்தில், ராஜஸ்தான் அணி, 1.20 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்து, இன்று ஐபிஎல் பயணத்தையும் அசத்தலாக ஆரம்பித்துள்ள சேத்தன் சக்காரியா, உள்ளூர் போட்டிகளில் ஆடும் போது, கிழிந்த ஷூ போட்டுக் கொண்டு விளையாடியுள்ளார். அதே போல, தனது வீட்டில் டிவி இல்லாத காரணத்தினால், கிரிக்கெட் போட்டிகளை நண்பர்களின் வீட்டிற்கு சென்று கண்டு கழித்துள்ளார்.
இந்நிலையில், சக்காரியாவின் தாயார், ஐபிஎல் போட்டிகள் வரை சாதித்து காட்டியுள்ள தனது மகனின் வாழ்க்கை பயணம் குறித்து கூறிய உருக்கமான தகவல் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. 'நாங்கள் அனுபவித்த வலி மற்றும் போராட்டங்களை யாரும் கடந்து சென்றிருக்க மாட்டார்கள் என நான் நம்புகிறேன். ஐபிஎல் ஏலத்தில், சக்காரியா தேர்வாவதற்கு சரியாக ஒரு மாதத்திற்கு முன், எனது இளைய மகன் தற்கொலை செய்து கொண்டான்.
அப்போது,சக்காரியா, சையது முஸ்டாக் அலி தொடரில் ஆடிக் கொண்டிருந்தார். இளைய சகோதரர் உயிரிழந்த தகவல் தெரிந்தால், அவர் அதிகம் நொறுங்கிப் போய் கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தாமல் போய் விடுவார் என்பதால், முதல் 10 நாட்கள், சகோதரனின் மரணம் குறித்து எந்த தகவலையும் நாங்கள் சக்காரியாவிடம் தெரிவிக்கவில்லை.
இதனிடையே, சக்காரியா அழைக்கும் போதெல்லாம், தம்பி பற்றி விசாரிப்பார். அவன் வெளியே சென்றிருக்கிறான் என்றும், ஏதேனும் வேலை செய்து கொண்டிருக்கிறான் என்றும் கூறி, திசை திருப்பினோம். அதே போல, எனது கணவரிடம் கூட, நான் சக்காரியாவைப் பேச அனுமதிக்கவில்லை. ஏனென்றால், அவர் உண்மையை கூறி விடுவார் என எனக்கு தெரியும்.
தொடர்ந்து, 10 நாட்களுக்கு பிறகு, எனது இளைய மகனின் மறைவு குறித்து, சக்காரியாவிடம் நானே கூறி, போனில் தேம்பி தேம்பி அழுதேன். சகோதரன் மறைவு பற்றி தெரிய வந்ததும், அடுத்த ஒரு வாரத்திற்கு சக்காரியா யாரிடமும் பேசவில்லை. எதுவும் சரி வர சாப்பிடவும் இல்லை. இருவரும் அத்தனை நெருக்கமான சகோதரர்களாக இருந்தனர்.
இந்த சோக சம்பவம் முடிந்து, கிட்டத்தட்ட ஒரு மாசத்திற்கு பிறகு, ஐபிஎல் ஏலத்தில், சேத்தன் சக்காரியாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 1.2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது. அது, ஏதோ பெரிய கனவு ஒன்று உண்மையானது போல எங்களை உணர வைத்தது. நாங்கள், பணமில்லாமல், வறுமையில் அதிகம் போராடினோம்' என சக்காரியாவின் தாயார் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இன்று ஐபிஎல் என்னும் மிகப் பெரிய இடத்தில் சாதித்துக் காட்டியுள்ள இளம் வீரர் சேத்தன் சக்காரியாவின் வெற்றிக்கு பின்னால், இப்படி ஒரு துயர சம்பவம் இருப்பது, ரசிகர்களை கலங்க வைத்துள்ளது.
மற்ற செய்திகள்