அவரை தக்க வைக்காம RCB பெரிய ‘தப்பு’ பண்ணிட்டாங்க.. நீங்க வேணா பாருங்க அவர்தான் அதிக விலைக்கு ‘ஏலம்’ போக போறாரு.. முன்னாள் வீரர் அதிரடி கருத்து..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆர்சிபி அணியால் விடுவிக்கப்பட்ட வீரர் ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் அடுத்த ஆண்டு முதல் அகமதாபாத், லக்னோ என்ற 2 புதிய அணிகள் இணைய உள்ளன. அதனால் அனைத்து அணியில் உள்ள வீரர்களும் கலைக்கப்பட்டு மெகா ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் ஏற்கனவே விளையாடிய 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள பிசிசிஐ அனுமதி வழங்கியது. அதன்படி அனைத்து அணிகளும் தங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டன.
இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி விராட் கோலியை 15 கோடிக்கும், ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லை 11 கோடிக்கும், இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை 7 கோடிக்கும் தக்க வைத்துள்ளது. நான்காவதாக ஒரு வீரரை தக்கவைக்க வாய்ப்பிருந்தும் பெங்களூர் அணி யாரையும் தக்க வைக்கவில்லை.
குறிப்பாக அந்த அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான சஹால் தக்க வைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் விடுவிக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘ஆர்சிபி அணி நிச்சயமாக சஹாலை தக்க வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் அவர் எப்போதுமே போட்டியில் முழு அர்ப்பணிப்புடன் விளையாடக் கூடியவர். அதுமட்டுமல்லாமல் ஆர்சிபி அணிக்காக நேர்மையாகவும், முழு மனதுடனும் அவர் தனது 100 சதவீத உழைப்பை வழங்கி விளையாடியுள்ளார்.
என்னை கேட்டால் பெங்களூரு அணி அவரை நிச்சயம் தக்க வைத்திருக்க வேண்டும். ஆனால் அவரை விடுவித்து ஆர்சிபி அணி பெரிய தவறு செய்துவிட்டது. அவர் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு செல்லும் பட்சத்தில், அவரை ஏலத்தில் எடுக்க பல அணிகள் அதிக விலைக்கு போட்டி போடும்’ என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்