‘கேப்டன்ஷி யாருக்கும் பிறப்புரிமை இல்ல’.. காட்டமாக கோலிக்கு அட்வைஸ் செய்த முன்னாள் வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகியது குறித்து கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி தொடரை கைப்பற்றியது. இதனை அடுத்து இந்திய டெஸ்ட் அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். விராட் கோலியின் இந்த திடீர் அறிவிப்பு அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
முன்னதாக டி20 மற்றும் ஒருநாள் அணிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்தும் விராட் கோலி விலகியிருந்தார். இதில் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலக விரும்பவில்லை என்றும், பிசிசிஐ வலுக்கட்டாயமாக அவரை விலக வைத்ததாகவும் விமர்சனம் எழுந்தது. அதனால் பிசிசிஐ மீது ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை வைத்தனர். இந்த சூழலில் டெஸ்ட் அணிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகியது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘கேப்டன் பதவி என்பது யாருடைய பிறப்புரிமை இல்லை. கேப்டன் பதவியை தோனி விராட் கோலிக்கு வழங்கினார். இதன்பின்னரும் விராட் கோலியின் தலைமையின் கீழ் அவர் விளையாடியுள்ளார். தோனி 3 ஐசிசி கோப்பைகளையும், 4 ஐபிஎல் கோப்பைகளையும் வென்று கொடுத்துள்ளார்.
அதனால் கோலி இனி ரன்களை அதிகமாக எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அது மிக முக்கியமானது. நீங்கள் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்று கனவு காணும் போது, கேப்டனாக வேண்டும் என்று கனவு காணக் கூடாது. நீங்கள் டாஸ் போடவும், பில்டிங் அமைக்கவும் அங்கு செல்லவில்லை. உங்களின் ஆற்றலும், திறமையும் அப்படியே இருக்க வேண்டும். நாட்டிற்காக விளையாடுவது என்பது கௌரவமான ஒன்று’ என கம்பீர் காட்டமாக தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்