17.5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் எடுத்த கேமரூன் க்ரீன்.. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் போட்ட ஆர்டர்?.. பரபர தகவல்!!.. அப்போ ஐபிஎல்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம், கடந்த (23.12.2022) அன்று கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற்றது.
முன்னதாக, ஐபிஎல் தொடரில் உள்ள 10 அணிகளும் தங்கள் அணியில் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் பட்டியலையும், விடுவித்த வீரர்கள் பட்டியலையும் முன்னரே வெளியிட்டிருந்தது.
இந்த மினி ஏலத்தில் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் குர்ரான் 18.50 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார். இதன்மூலம் ஒட்டுமொத்த ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வரலாறையும் படைத்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக, கேமரூன் க்ரீனை மும்பை இந்தியன்ஸ் அணி, 17.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது அதிகபட்சமாக உள்ளது. மேலும் மும்பை அணி அதிக தொகைக்கு ஏலத்தில் எடுத்த வீரராகவும் கேமரூன் க்ரீன் மாறி உள்ளார்.
ஆல் ரவுண்டரான கேமரூன் க்ரீன், பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் தலைச் சிறந்த வீரராக இருப்பதால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவரது பங்களிப்பு நிச்சயம் கைகொடுக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
அப்படி ஒரு சூழலில், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்திருந்தார் கேமரூன். தென்னாப்பிரிக்கா வீரர் நோர்ஜே 145 கிமீ வேகத்தில் வீசிய பந்து கேமரூன் க்ரீனின் வலது கை ஆள்காட்டி விரலை காயமுற செய்தது. கையில் ரத்தமும் கொட்டி இருந்த நிலையில், 23 வயதான கேமரூன் க்ரீன், இந்த காயத்தில் இருந்து முற்றிலும் குணமாக 5 மாதங்கள் ஆகும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், தற்போது கேமரூன் க்ரீன் குறித்து வெளியாகி உள்ள தகவல் ஒன்று, மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள் மத்தியில் சற்று பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.
கையில் காயம் அடைந்துள்ளதால், இந்த ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி வரை கேமரூன் க்ரீன் பந்து வீசக் கூடாது என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அவருக்கு உத்தரவு போட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் போட்டி கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறுகிறது. அதே போல, இந்த ஆண்டு உலக கோப்பைத் தொடரும் உள்ளதால் அனைத்தையும் கருத்தில் கொண்டு கேமரூன் க்ரீன் பந்து வீச வேண்டாம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்ததாக தகவல்கள் கூறுகின்றது.
அப்படி ஒரு சூழலில், ஏப்ரல் 13 ஆம் தேதிக்கு முன்பு ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் பட்சத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியில் கேமரூன் க்ரீன் பேட்ஸ்மேனாக மட்டும் தான் இருப்பார் என்றும் தெரிகிறது.
மற்ற செய்திகள்