‘இவர மாதிரி ஒருத்தரை இந்தியா உருவாக்கும்னு நெனக்கவே இல்ல’.. பிரபல இந்திய வீரரை புகழ்ந்து தள்ளிய விண்டீஸ் ஜாம்பவான்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் ஆண்டி ராபர்ட்ஸ் புகழ்ந்து பேசியுள்ளார்.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவா மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் என அழைக்கப்படும் ஆண்டி ராபர்ட்ஸ் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில் பும்ராவின் பந்து வீச்சு குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். அதில், ‘நான் கிரிக்கெட்டில் பார்த்தவரை பும்ராவின் ஆக்ஷன் மிகவும் வலிமையானது. அவருடைய பந்து வீசும் ஆக்ஷனை புரிந்துகொள்ள ஆராய வேண்டியுள்ளது. இவர் மட்டும் எங்களுடைய காலகட்டத்தில் இருந்திருந்தால், அவரைப் போன்ற ஒரு வீரரை நாங்கள் உருவாக்கியிருப்போம். எங்களுடைய பந்து வீசும் ஆக்ஷனில் இது மட்டும் இல்லாமல் போய்விட்டது’ என கூறியுள்ளார்.
மேலும் கூறிய அவர், ‘என்னுடைய காலகட்டத்தில் இந்திய அணியில் ஏராளமான ஸ்பின்னர்கள் இருந்தனர். அவர்கள் சிறப்பாக விளையாடினாலும் வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெற முடியவில்லை. இந்தியாவில் கபில்தேவ் மற்றும் சில வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். ஆனால் பும்ராவை போன்ற வேகப்பந்து வீச்சாளரை உருவாக்குவார்கள் என நினைக்கவில்லை. நான் பார்த்தவரையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் பும்ரா சிறந்தவர்’ என ஆண்டி ராபர்ட்ஸ் புகழ்ந்து பேசியுள்ளார்.