BOXING DAY: கொளுத்தும் வெயில் & 155 கிமீ வேகத்தில் வீசப்பட்ட பந்து.. அடுத்தடுத்து காயமடைந்த ஆஸ்திரேலிய வீரர்கள்.. பரபரப்பான சம்பவங்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியா & தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் பரபரப்பான சம்பவங்கள் நடந்துள்ளன.
டீன் எல்கர் தலைமையிலான தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
பிரிஸ்பேன் காபாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதல் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் பேட்டிங் செய்ய தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி, முதல் இன்னிங்சில் 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மார்கோ ஜான்சன் & வெர்ரைன் இருவரும் முறையே 59 & 52 ரன்கள் குவித்து அணியை கௌரவமான ஸ்கோரை எட்ட உதவினர்.
ஆஸ்திரேலியா தரப்பில் கேமரூன் க்ரீன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்டார்க் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா அணி, ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 386 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியா அணி சார்பில் டேவிட் வார்னர் 200 ரன்கள் குவித்தார்.
மெல்போர்னில் வெப்பநிலை 37 டிகிரி - 40 டிகிரி செல்சியஸ் வரை இருந்ததால் உடலில் நீரிழப்பு காரணமாக வார்னருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் ரிட்டையர்டு ஹர்ட் முறையில் இரட்டை சதம் அடித்த வார்னர் களத்தில் இருந்து வெளியேறினார். 36 வயதாகும் ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னருக்கு இது 100 வது டெஸ்ட் போட்டியாகும்.
இதற்கிடையில் கேமரூன் க்ரீன், தென்னாப்பிரிக்கா வீரர் நோர்கியாவை எதிர் கொண்ட போது 155 கிமீ வேகத்தில் வீசப்பட்ட பந்து வினாடிகளில் அவரது வலது கை ஆள்காட்டி விரலை பதம் பார்த்தது. இதனால் ரத்தம் வடிய ஆரம்பிக்க கேமரூன் க்ரீன் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். இதற்கு முன் பந்து வீச்சாளர் ஸ்டார்க் இந்த போட்டியில் காயமுற்றது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்து மூன்று ஆஸ்திரேலியா அணி வீரர்கள் காயமடைந்துள்ளது ஆஸ்திரேலியா அணிக்கு இந்த போட்டியில் சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்