‘அந்த ஸ்டேடியத்துல அவர் சிலைய வைக்கக் கூடாது’... ‘அப்படி வச்சிங்கனா’... ‘ஸ்டேடியம் கேலரில உள்ள என் பெயர எடுத்துருங்க’... ‘முன்னாள் ஸ்பின் கிங் கடும் எதிர்ப்பு’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் சிலையை வைப்பதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இடது கை சுழற்பந்து வீச்சாளருமான பிஷன் சிங் பேடி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

‘அந்த ஸ்டேடியத்துல அவர் சிலைய வைக்கக் கூடாது’... ‘அப்படி வச்சிங்கனா’... ‘ஸ்டேடியம் கேலரில உள்ள என் பெயர எடுத்துருங்க’... ‘முன்னாள் ஸ்பின் கிங் கடும் எதிர்ப்பு’...!!!

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த 1999 முதல் 2013 ஆம் ஆண்டு வரை டெல்லி கிரிக்கெட் அமைப்பின் தலைவராக பதவி வகித்தார். இதையடுத்து ஃபெரோஸ் ஷா கோட்லா எனும் பெயர் கொண்ட டெல்லி கிரிக்கெட் மைதானத்தின் பெயரை, அருண் ஜெட்லி நினைவாக அவருடைய மறைவுக்குப் பிறகு அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானம் என மாற்றப்பட்டது.

அருண் ஜெட்லியின் மகன் ரோஹன் ஜெட்லி, டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக உள்ளதால், டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் அருண் ஜெட்லி நினைவாக அவருக்கு 6 அடியில் சிலை எழுப்பப்படும் என சமீபத்தில் முடிவெடுக்கப்பட்டது. டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் இந்த முடிவிற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Bishan Singh Bedi wants his name removed from Kotla stand

இது தொடர்பாக டெல்லி கிரிக்கெட் சங்கத்துக்கு, அவர் எழுதியுள்ள கடிதத்தில் ‘நான் மிகவும் பொறுமையாகவும் நிதானமாகவும் இருப்பதை எண்ணி பெருமைப்படுகிறேன். ஆனால் நடக்கும் சம்பவங்களை பார்த்து நான் பொறுமை இழந்து விடுவேன் என அச்சப்படுகிறேன். தயவு செய்து அருண் ஜெட்லிக்கு சிலை வைப்பதாக  இருந்தால் பார்வையாளர்கள் ஸ்டாண்டில் உள்ள என் பெயரை நீக்குங்கள்.

மேலும் டெல்லி கிரிக்கெட் சங்க உறுப்பினராகவும் நீடிக்க விரும்பவில்லை. தீவிர ஆலோசனைக்குப் பின் தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். மரியாதை என்பது நாம் செய்யும் செயல்களிலும், பொறுப்புகளிலிருந்தும் கிடைக்கும் என்று நமக்கு தெரியும். ஆனால் அருண் ஜெட்லி மறைவுக்குப் பின் அவசர அவசரமாக அவரின் பெயர் அரங்கிற்கு சூட்டப்பட்டது.

என்னைப் பொருத்தவரை ஜெட்லி சிறந்த நிர்வாகியாக இருக்க வில்லை. அவருடைய நிர்வாகத்தில் பல்வேறு தோல்விகள் இருந்தன. அவரின் முடிவுகளை நான் கடுமையாக எதிர்த்திருக்கிறேன். அருண்ஜெட்லி ஒரு அரசியல் தலைவர். அவரை நாடாளுமன்றம் நினைவு கூறலாம்.

Bishan Singh Bedi wants his name removed from Kotla stand

மற்ற நாடுகளில் எல்லாம் கிரிக்கெட் அரங்கிற்கு சாதனை படைத்த வீரர்களின் பெயர்கள்தான் வைக்கப்பட்டது. கிரிக்கெட் வீரர்களைக் காட்டிலும் நிர்வாகிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு இடத்தில் நான் நீடிக்க விரும்பவில்லை. விளையாட்டுக்கு விளையாட்டு துறையில் சாதித்தவர்கள்தான் முன்மாதிரிகளாக இருக்க வேண்டும்.

டெல்லி கிரிக்கெட் அமைப்பு உலகளாவிய கிரிக்கெட் கலாச்சாரத்தை புரிந்துகொள்ளவில்லை. நான் வெளியேறுவது அவசியம் என நினைக்கிறேன்’ என அக்கடிதத்தில் பிஷன் சிங் பேடி குறிப்பிட்டுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனாகவும், பின்னர் அணியின் மேலாளராகவும் இருந்த பிஷன் சிங் பேடி, 1990 – 91 ஆம் ஆண்டு இந்திய அணியின் முதல் அதிகாரப்பூர்வ பயிற்சியாளராக இருந்தவர். ஸ்பின் கிங் என்றும் அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்