"டி 20 மேட்ச்ல வெறும் 15 ரன்னுக்கு ஆல் அவுட்டா?".. கிரிக்கெட் உலகையே திரும்பி பாக்க வெச்ச சம்பவம்.. யாருப்பா அந்த பவுலருங்க?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் புகழ் பெற்று விளங்குகிறதோ, அதே போல ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ் டி 20 லீக் தொடர்கள் மிக பிரபலம் வாய்ந்த தொடர்களில் ஒன்றாகும்.
பிக்பேஷ் தொடரில் சாதித்த பல வீரர்கள், சர்வதேச அணிக்காகவும் ஆட தேர்வாவார்கள். மேலும் இந்த தொடரில், ஐபிஎல் போலவே இளம் வீரர்கள் முதல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட பல நாடுகளின் நட்சத்திர வீரர்கள் இந்த தொடரில் இடம்பெற்று ஆடி வருகிறார்கள்.
இதனையடுத்து, 2022 - 23 ஆம் ஆண்டு பிக்பேஷ் தொடர் ஒரு சில தினங்களுக்கு முன் ஆரம்பமாகி உள்ளது. இந்த நிலையில், இந்த தொடரில் ஆடி வரும் அணி ஒன்று, 15 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி உள்ள விஷயம், தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.
இதில், சிடில் தலைமையிலான அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும், ஜேசன் சங்கா தலைமையிலான சிட்னி தண்டர் அணியும் மோதி இருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அடிலெய்டு அணி, 20 அவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ரன்களை எடுத்திருந்தது. அதிகபட்சமாக கிறிஸ் லின் 36 ரன்கள் எடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய சிட்னி தண்டர் அணி, ஆரம்பத்தில் இருந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அலெக்ஸ் ஹேல்ஸ், ரிலி ரஸவ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இருந்த போதும் அந்த அணியால் ரன் சேர்க்க முடியவில்லை.
வெறும் 5.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த சிட்னி தண்டர் அணி, 15 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஒரு வீரர் 4 ரன் எடுத்திருந்ததே அந்த அணியின் தனிநபர் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. பவர் பிளே முடிவதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் சிட்னி அணி இழந்த நிலையில், டி20 தொடரில் குறைந்தபட்ச ஸ்கோராகவும் இது பதிவாகியுள்ளது. மேலும் அடிலெய்டு அணி சார்பில் 2.5 ஓவர்கள் பந்து வீசிய ஹென்றி தோர்ன்டன் 3 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அவரைப் போலவே, வெஸ் அகரும், 2 ஓவர்களில் 6 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
டி 20 போட்டியில் வெறும் 15 ரன்களுக்கு ஒரு அணி அதுவும் பவர் பிளே முடிவதற்குள் ஆல் அவுட் ஆன விஷயம் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்படும் வருகிறது.
மற்ற செய்திகள்