‘யோ-யோவில் தேர்வாகியும் எனக்கு நடந்தது அநியாயம்’.. ‘உலகக்கோப்பை கனவு குறித்து யுவராஜ் சிங் வேதனை’..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுயோ-யோ உடல்தகுதித் தேர்வில் தேர்வாகியும் நான் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டது அநியாயம் என யுவராஜ் சிங் வேதனை தெரிவித்துள்ளார்.
2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையிலும், 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியிலும் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் பங்களிப்பு மறக்க முடியாதது. ஆல்ரவுண்டரான அவர் கடந்த 3 மாதங்களுக்கு முன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார்.
இந்நிலையில் தனியார் சேனல் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “இந்திய அணிக்கான யோ-யோ உடல்தகுதித் தேர்வில் நான் தேர்வாகியும் என்னை 2017ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்குத் தேர்வு செய்யவில்லை. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பையில் 2 போட்டிகளில் நான் ஆட்டநாயகன் விருது பெற்றேன்.
பின்னர் இலங்கை தொடருக்கு முன்பாக காயம் ஏற்பட்டு, அதிலிருந்து மீண்டுவர தயாராகிக் கொண்டிருந்தபோது அணியிலிருந்து நீக்கப்படுவேன் என நான் எதிர்பார்க்கவே இல்லை. நான் 36 வயதில் யோ-யோ தேர்வுக்குத் தயாராகி அதில் தேர்வானேன். அதில் தேர்வாகாமல் இருந்திருந்தால் அதுவே ஒரு காரணமாக சொல்லப்பட்டிருக்கும்.
15-17 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடிய ஒரு வீரரை மரியாதை நிமித்தமாகக் கூட அழைத்துப் பேசாமல் அணியிலிருந்து நீக்கியது துரதிருஷ்டம். என்னிடம் மட்டுமல்ல ஜாகீர் கான், வீரேந்திர சேவாக் என யாரிடமும் அணி நிர்வாகம் பேசவில்லை. இந்தியாவிற்கு வெளியே சென்று விளையாட வேண்டுமென்றால் ஓய்வு பெற வேண்டும் என்பதால் தான் ஓய்வை அறிவித்தேன். என்னைப் பொறுத்தவரையில் நான் சரியான நேரத்தில்தான் ஓய்வு பெற்றுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.