துபாயில் நடந்த பேச்சு வார்த்தை.. அப்போ ‘தோனி’ போட்ட ஒரு கண்டிஷன்.. பிசிசிஐ செயலாளர் சொன்ன சீக்ரெட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பகிர்ந்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய வீரர்களின் பட்டியலை நேற்று பிசிசிஐ வெளியிட்டது. இதில் தமிழக வீரர்களான அஸ்வின், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடராஜன், வாசிங்டன் சுந்தர் ஆகிய இரு வீரர்கள் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.
இந்திய வீரர்களின் பட்டியலை வெளியிட்டதும், அடுத்த முக்கிய அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டது. அதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு ஆலோசகராக செயல்படுவார் என பிசிசிஐ தெரிவித்தது. இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.
இதுகுறித்து தெரிவித்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, ‘இந்திய அணிக்கு மீண்டும் சேவை செய்ய தோனி ஒத்துக்கொண்டதை நான் பெருமையாக நினைக்கிறேன். பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் மற்ற ஊழியர்களுக்கும் தோனி நன்கு பழக்கமானவர். தோனியை ஆலோசகராக நியமிக்க முடிவெடுத்ததும், துபாயில் இருந்த அவரிடம் பேசினேன்.
டி20 உலகக்கோப்பைக்கு மட்டும் இந்திய அணிக்கு ஆலோசகராக இருக்க அவர் ஒத்துக்கொண்டார். இதுதொடர்பாக சக ஊழியர்களுடன் ஆலோசனை செய்தேன், அவர்களும் உடனே இதற்கு சம்மதம் தெரிவித்தனர். பின்னர் பயிற்சியாளர், கேப்டன் மற்றும் துணைக் கேப்டனிடம் பேசி இறுதி செய்தோம்’ என ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இதன்மூலம் டி20 உலகக்கோப்பை தொடருக்கு மட்டுமே இந்திய அணிக்கு ஆலோசகராக இருக்க தோனி ஒப்புக்கொண்டது தெரியவந்துள்ளது.
தோனி கடைசியாக 2019-ம் ஆண்டு நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டிகான உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் விளையாடினார். அதன்பின்னர் 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இது அவரது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணிக்கு ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்