'எங்கிட்ட இழக்குறதுக்கு இனி எதுவும் இல்ல'!.. 'அந்த அளவுக்கு தகுதி இல்லாதவனா நான்?'.. குல்தீப் யாதவ்-ஐ விரட்டும் சோகம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் பவுலர் குல்தீப் யாதவ், தற்போது தனது வாழ்க்கையின் மிக மோசமான சூழ்நிலைகளை சந்தித்து வருகிறார்.

'எங்கிட்ட இழக்குறதுக்கு இனி எதுவும் இல்ல'!.. 'அந்த அளவுக்கு தகுதி இல்லாதவனா நான்?'.. குல்தீப் யாதவ்-ஐ விரட்டும் சோகம்!

2017ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில், பாகிஸ்தானிடம் இந்தியா படுதோல்வி அடைந்து சரணடைந்த பிறகு, அணிக்கு இனி ரிஸ்ட் (மணிக்கட்டு) ஸ்பின்னர்கள் தான் தேவை என்று கோச் ரவி சாஸ்திரி சொல்ல, மெல்ல மெல்ல அஷ்வினும், ஜடேஜாவும் ஓரங்கட்டப்பட, அணிக்குள் யுஸ்வேந்திர சஹாலும், குல்தீப் யாதவும் ஆளுமை செலுத்தத் தொடங்கினர்.

கோச் ரவி சாஸ்திரி கணித்ததைப் போல இருவரும் அமர்க்களப்படுத்த, ஸ்பின் ட்வின்ஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டனர். ஆனால், இது வெகு நாட்கள் நீடிக்கவில்லை.  

குறிப்பாக, குல்தீப் யாதவ்வின் ஆட்டம் நாளுக்கு நாள் அதளபாதாளத்திற்கு சென்றுக் கொண்டிருந்தது. அவரது பந்துகளை பேட்ஸ்மேன்கள் விளாசத் தொடங்கினர். அவை மைதானத்தை விட்டு வெளியே பறந்தன. இதனால், அவரே நம்பிக்கை இழந்தார். அந்த இடத்தில் இருந்து அவருடைய சரிவு ஆரம்பித்தது.  

சச்சின், தோனி, கோலி, ஜாகீர் என்று இதுவரை எத்தனையோ ஹீரோக்கள் கூட தங்கள் ஃபார்மை இழந்து தடுமாறி, தள்ளாடி, என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து, பிறகு கடுமையாக போராடி களத்தில் தங்கள் பலத்தை நிரூபித்தவர்கள் தான். இவர்களை விட மிகச்சிறந்த உதாரணமாக ஆஷிஷ் நெஹ்ரா இருப்பார். 90ஸ் கிட்ஸ் காலத்தில் ரிக்கி பாண்டிங், மேத்யூ ஹெய்டன், சைமண்ட்ஸ், கிப்ஸ், காலிஸ், சங்கக்காரா என்று பல பேட்ஸ்மேன்களிடம் அடிவாங்கிய ஃபாஸ்ட் பவுலர் அவர். ஒரு கட்டத்தில் அணியில் இருந்தே காணாமல் போனார்.

கங்குலி, டிராவிட் காலமெல்லாம் முடிந்து தோனி அணியைத் தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்க, எங்கிருந்தோ வந்து ஐபிஎல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்து துல்லியமான லைன் & லெந்த்தில் பந்தை பிட்ச் செய்து மிரள வைத்தார். அவரது சிறப்பான ஆட்டத்தால் இந்திய டி20 அணியின் மெயின் பவுலராக உருவெடுத்தார். அவருடன் ஒன்றாக இணைந்து விளையாடிய வீரர்கள் கமெண்ட்ரி செய்து கொண்டிருக்க, நெஹ்ரா வெரைட்டி கலந்து விருந்து வைத்துக் கொண்டிருந்தார்.

ஆனால், அப்படியொரு மாஸ் come back தான் குல்தீப்பிடம் மிஸ் ஆகிறது. அவர் அவுட் ஆஃப் ஃபார்ம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. இன்னமும் அவரால் மீண்டு வர முடியவில்லை. இந்த சூழலில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்துக்கு பேட்டியளித்துள்ள குல்தீப், நீங்கள் தொடர்ந்து போட்டிகளில் விளையாடினால், உங்களது தன்னம்பிக்கை உச்சத்தில் இருக்கும். அதுவே தொடர்ந்து வெளியே உட்கார்ந்திருந்தால், அது நிலையை மேலும் மோசமாக்கும்.

கடந்த பிப்ரவரி மாதம், சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நான் விளையாடிய போது, பெரும் மன அழுத்தத்தை உணர்ந்தேன். ஒன்றும் நடக்கவில்லை. போன வருடத்தை விட இந்த வருடம் மேலும் எனக்கு மோசமாகிவிட்டது. இது எனக்கு போதாத காலம். 

ஸ்டெம்ப்புகளுக்கு பின்னால் நின்று ஆலோசனை அளிக்கும் அனுபவம் வாய்ந்த தோனி போன்ற ஒருவரை நாங்கள் ரொம்பவே மிஸ் செய்கிறோம். அவருடைய அனுபவத்தை நாங்கள் மிஸ் செய்கிறோம். இப்போது ரிஷப் அந்த இடத்தில் இருக்கிறார். அனுபவங்களைப் பெற்று எதிர்காலத்தில் அவரும் டிப்ஸ் வழங்குவார் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்