அடுத்த ஐபிஎல் சீசனுக்கு இப்பவே ‘மெகா’ திட்டம்.. ரசிகர்களுக்கு ‘சர்ப்ரைஸ்’ கொடுக்கப் போகும் பிசிசிஐ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் ஏலத்தில் பல புதிய மாற்றங்களை பிசிசிஐ கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இந்த ஆண்டு நடந்த 14-வது சீசன் ஐபிஎல் தொடர் கொரோனா தொற்று காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மொத்தம் 60 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 29 போட்டிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன. அதனால் எஞ்சிய 31 போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது. வரும் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கி அக்டோபர் 15-ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 15-வது சீசன் ஐபிஎல் தொடருக்கு பிசிசிஐ தற்போதே ஆயத்தமாகி வருகிறது. அதன்படி, ஐபிஎல் தொடரில் தற்போது 8 அணிகள் உள்ள நிலையில், அடுத்த ஆண்டு முதல் 10 அணிகள் மோதவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 2 புதிய அணிகளுக்கான டெண்டரை வரும் ஆகஸ்ட் மாதம் பிசிசிஐ கோரவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதிய அணிகளுக்கான ஒப்பந்தங்கள் பரீசலிக்கப்பட்டு, வரும் அக்டோபர் மாதம் விவரங்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் வீரர்களுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் 3 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர் அல்லது 2 இந்திய வீரர்கள் மற்றும் 2 வெளிநாட்டு வீரர்கள் என 4 வீரர்களை தக்கவைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது.
இப்போதைக்கு இந்த புதிய அணிகளை வாங்க கொல்கத்தாவைச் சேர்ந்த ஆர்பி சஞ்ஜிவ் கோயங்கா குழுமம், அகமதாபாத்தைச் சேர்ந்த அதானி குழுமம், ஹைதராபாத்தைச் சேர்ந்த அரபிந்தோ பார்மா குழுமம் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த டோரென்ட் குழுமம ஆகியவை ஆர்வமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒவ்வொரு அணியின் வீரர்களது மொத்த சம்பளத்தொகை ரூ.90 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
News Credits: Times of India
மற்ற செய்திகள்