மறுபடியும் எப்போ ‘ஐபிஎல்’ தொடங்கும்..? ஆவலோடு காத்திருக்கும் ரசிகர்கள்.. வெளியான ‘சூப்பர்’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்குவது குறித்த அறிவிப்பு சில நாட்களில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் நடைபெற்று வந்த 14-வது சீசன் ஐபிஎல் தொடர் கொரோனா தொற்று காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரீயருக்கு முதலில் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் எல்.பாலாஜி மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதனால் அந்த சமயத்தில் நடக்க இருந்த போட்டிகள் நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் விக்கெட் கீப்பர் சாஹா மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இப்படி தொடர்ந்து வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், ஐபிஎல் தொடரை தற்காலிகமாக பிசிசிஐ ஒத்திவைத்தது.
மேலும் இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மீண்டும் இங்கு ஐபிஎல் தொடரை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆண்டு நடைபெற்றதுபோல ஐக்கிய அரபு அமீரகத்தில் எஞ்சியுள்ள போட்டிகளை நடத்த பிசிசிஐ ஆலோசனை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடர் குறித்து ஏபிபி ஊடகம் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர், வரும் செப்டம்பர் மாதம் 18 அல்லது 19-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் நடந்த வாய்ப்புள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் சனிக்கிழமை பிசிசிஐ சார்பில் நடத்தப்படும் ஆலோசனை கூட்டத்தின் முடிவில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெற்றிகரமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டதால், மீண்டும் அங்கு நடத்த வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
மற்ற செய்திகள்