‘எங்க டீமுக்கு விளையாட வாங்க’.. லக்னோ அணி கொடுத்த ‘செம’ ஆஃபரை மறுத்த இளம் வீரர்.. இதுதான் காரணம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுலக்னோ அணி கொடுத்த ஆஃபரை வங்க தேச இளம் வேகப்பந்து வீச்சாளர் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு முதல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகள் இணைகின்றன. இந்த நிலையில் லக்னோ அணியில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து வீரர் மார்க் வுட் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதனால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்ய லக்னோ அணி தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி வங்கதேச அணியை சேர்ந்த டஸ்கின் அகமதுக்கு லக்னோ அணி சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த வாய்ப்பினை அவர் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வங்கதேச அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வங்கதேச அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து சொந்த மண்ணில் இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் வங்கதேச அணி விளையாட இருக்கிறது.
இந்த தொடர்களில் டஸ்கின் அஹமது இடம் பெற்றுள்ளதால் அவர் ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்கப்பட மாட்டார். அவரிடம் இந்த ஐபிஎல் வாய்ப்பு குறித்து பேசி இருந்தோம். ஆனால் அவரும் அணியின் நலன் கருதி அதனை புரிந்து கொண்டு, தான் ஐபிஎல் தொடரில் விளையாட வில்லை என கூறிவிட்டார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக லக்னோ அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர், டஸ்கின் அகமது எங்கள் அணியுடன் இணைந்து நன்றாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். அப்படி அவர் அணியில் இணையும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடரை தவிர்த்து விட்டு லக்னோ அணியுடன் இணைவார் என கம்பீர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்