‘இது யாருக்குமே தெரியாது’!.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த அம்மா.. சோகத்தை மறைச்சிட்டு விளையாடிய வீரர்.. இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் நடந்த ‘உருக்கமான’ சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டியின் போது பாகிஸ்தான் வீரரின் தாய் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த சம்பவம் ரசிகர்களை உருக வைத்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தங்களது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் எடுத்தது.
இதனால் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவை பாகிஸ்தான் வென்றுள்ளது.
இந்த நிலையில், இப்போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் (Babar Azam) தாய் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தெரிவித்த பாபர் அசாமின் தந்தை ஆசம் சித்திக் (Azam Siddique), ‘இந்திய அணிக்கு எதிராக பாபர் அசாம் விளையாடியதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. அவன் என்னதான் மைதானத்தில் மகிழ்ச்சியாக இருந்தாலும், உள்ளுக்குள் வலியுடன் இருப்பது யாருக்கும் தெரியாது.
இந்திய அணிக்கு எதிராக விளையாடும்போது அவனுடைய தாய் வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே என் மனைவியின் உடல்நிலை சரியில்லாமல் உள்ளது. ஆனால் இதை நினைத்து பாபர் அசாம் பலவீனம் அடைந்துவிடக் கூடாது என்பதற்காகவே அன்று நான் மைதானத்துக்கு வந்தேன். சில ஆண்டுகளாக தனது தாயின் நிலையை நினைத்து மனஉளச்சலுடன்தான் பாபர் அசாம் விளையாடி வருகிறான்’ என ஆசம் சித்திக் உருக்கமாக தெரிவித்துள்ளார். தாய் தீவிர சிகிச்சையில் இருந்தபோதும் நாட்டுக்காக சிறப்பாக விளையாடிய பாபர் அசாமின் செயல் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்று வருகிறது.
மற்ற செய்திகள்