‘எல்லாரையும் கெஞ்சிக் கேட்டுக்கிறேன்’!.. அரையிறுதி தோல்வியால் துவண்டுபோன வீரர்கள்.. டிரெஸ்ஸிங் ரூமில் பாகிஸ்தான் கேப்டன் கொடுத்த தரமான அட்வைஸ்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த பின் சக வீரர்களுக்கு பாகிஸ்தான் கேப்டன் வழங்கிய அறிவுரை இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டி கடந்த வியாழக்கிழமை துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை எடுத்தது. இப்போட்டியில் தோல்வியடைந்ததால், டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் வெளியேறியது.
இந்த நிலையில் போட்டி முடிந்த பின் டிரெஸ்ஸிங் ரூமில் சக வீரர்களுக்கு பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் அறிவுரை வழங்கினார். இந்த வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், ‘அணி நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தோல்வியால் நாம் துவண்டுதான் போயுள்ளோம். எங்கு தவறு செய்தோம், எந்த இடத்தில் சிறப்பாக விளையாடியிருக்கலாம் என அனைவரும் சிந்தித்து வருவது எனக்கு தெரிகிறது. நமது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த போட்டியில் நாம் நன்றாக விளையாடவில்லை. அதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.
ஆனால் இந்த தோல்வியால் நம்முடைய ஒற்றுமையை உடைந்துவிடக் கூடாது. யாரும் யார் மீதும் குற்றம் சுமத்தக்கூடாது. இந்த தொடரில் கிடைத்த நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்வோம். இந்த தோல்வியில் கற்ற பாடத்தைக் கொண்டு, எதிர்காலத்தில் மீண்டும் இதுபோல் நடக்காமல் தடுக்க வேண்டும். அதனால் நம் ஒற்றுமை உடைந்துவிடக் கூடாது என கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். நமது ஒற்றுமை ஒன்றும் ஒரே நாளில் வந்துவிடவில்லை. அதனால் தோல்வி குறித்து அதிகமாக கவலைப்படாமல் ஒற்றுமையாக இருப்போம்.
எல்லாரும் தங்களால் முடிந்த உழைப்பை கொடுத்தீர்கள். இதுதான் நமக்கு தேவை. இப்போதுதான் ஒருவருக்கொருவர் ஆதவராக இருக்க வேண்டிய நேரம். எந்த வீரரும் அணியால் தனித்துவிடப்பட்டார் என்ற செய்தியை நான் கேட்கக்கூடாது. அனைவருக்கும் வலி இருக்கத்தான் செய்யும், அதை கடந்து வர வேண்டும்’ என பாபர் அசாம் பேசியுள்ளார். இது பாகிஸ்தான் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
மற்ற செய்திகள்