"'தோனி'ய அவுட் பண்ணது ஒரு சின்ன 'ஐடியா' வெச்சு தான்.." 'ரிஷப் பண்ட்' போட்ட 'மாஸ்டர்' பிளான்.. 'இளம்' வீரர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவில் வைத்து இந்தாண்டு நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர், சில அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான காரணத்தினால், பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஜூன் மாதம் 18 ஆம் தேதியன்று, நியூசிலாந்து அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது. இதற்கான இந்திய அணியும் சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்தது. 20 வீரர்கள் வரை தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதல் வீரர்களாக 4 இளம் வீரர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஐபிஎல் சீசனில், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஆடிய அவேஷ் கானும் (Avesh Khan), கூடுதல் வீரர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொடரில், இதுவரை 8 போட்டிகள் ஆடியுள்ள அவேஷ் கான், 14 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக, தோனி மற்றும் கோலி ஆகியோரை போல்டு ஆக்கி, பட்டையைக் கிளப்பியிருந்தார்.
மேலும், இந்த தொடரில், டெல்லி அணி, சென்னைக்கு எதிராக மோதிய தங்களது முதல் போட்டியில், டுபிளெஸ்ஸிஸ் மற்றும் தோனி ஆகியோரை அவுட் செய்திருந்தார் அவேஷ் கான். தோனி (Dhoni) சந்தித்த இரண்டாவது பந்திலேயே, அவரை போல்டு ஆக்கினார்.
இந்நிலையில், தோனியை அவுட் செய்ததன் ரகசியம் பற்றி, அவேஷ் கான் மனம் திறந்துள்ளார். 'தோனி பேட்டிங் செய்ய வந்த போது, குறைந்த ஓவர்களே இருந்ததால், தோனி அடித்து தான் ஆடுவார் என்பது பண்ட்டிற்கு தெரியும். ஆனால், தோனி நான்கு மாதங்கள் கழித்து கிரிக்கெட் போட்டிகளில் ஆடுகிறார் என்பதால், அடித்து ஆடுவது என்பது அவருக்கு சவாலாக அமையும் என்றும் பண்ட் அறிந்து வைத்திருந்தார்.
எனவே, என்னிடம் ஷார்ட் லெங்த்தில் பந்துகளை வீச பண்ட் கூறினார். நான் அதனை மட்டும் தான் செய்தேன். அந்த பந்தை அடித்து ஆட தோனி முயற்சி செய்ய, இன்சைடு எட்ஜ் மூலம் அவுட்டாக மாறியது. கிரிக்கெட் போட்டிகள் அதிகம் ஆடாமல் இருந்த தோனி மீது, அதிக நெருக்கடி கொடுத்து அவரை அவுட் எடுக்க நினைத்தோம். அதன் படியே நடந்தது' என தோனியை அவுட் எடுத்த ரகசியம் பற்றி அவேஷ் கான் கூறினார்.
தொடர்ந்து, ரிஷப் பண்ட் கேப்டன்சி பற்றி பேசிய அவேஷ் கான், 'நான் பந்து வீச ஓடி வரும் போது, ரிஷப் பண்ட்டை பார்த்துக் கொண்டே ஓடி வருவேன். அந்த சமயத்தில், நான் எப்படி பந்து வீசப் போகிறேன் என என்னை மட்டும் தான் பேட்ஸ்மேன் பார்த்துக் கொண்டிருப்பார். அப்போது, நான் எந்த பந்தை வீச வேண்டும் என்பது பற்றி, ஒரு சைகை இருக்கும். உதாரணத்திற்கு நான் யார்க்கரோ, அல்லது வைடு அவுட் சைடு போட வேண்டும் என்றாலும் அதற்கு ஒரு சைகையை பண்ட் வைத்திருப்பார்' என அவேஷ் கான் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்